பக்கம் எண் :

திருவாசகம்
461


சிறப்புடைய உவமப் பொருள் இல்லையாதலின், அவற்றை, ‘உவமனிலிறந்தன’ என்றும் கூறினார். ‘ஒப்புடையனல்லன் ஒருவனல்லன் ஒரூரனல்லன் ஒருவமனில்லை’ என்று திருநாவுக்கரசர் வாக்கையும் ஒப்பிட்டுக்கொள்க.

இதனால், இறைவனைப் பல வகையில் நினைத்து உருக வேண்டும் என்பது கூறப்பட்டது.

1

நீதி யாவன யாவையும் நினைக்கிலேன் நினைப்பவ ரொடுங்கூடேன்
ஏத மேபிறந் திறந்துழல் வேன்றனை என்னடி யானென்று
பாதி மாதொடுங் கூடிய பரம்பரன் நிரந்தர மாய்நின்ற
ஆதி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.

பதப்பொருள் : நீதியாவன யாவையும் - நீதியாகவுள்ள எவற்றையும், நினைக்கிலேன் - நினைக்கமாட்டாமலும், நினைப்பவரொடும் கூடேன் - கருதுவாரொடும் சேரமாட்டாமலும், ஏதமே பிறந்து இறந்து - துன்பமே உண்டாகும்படி பிறந்தும், இறந்தும் உழல்வேன் தனை - துன்புறுகின்ற என்னை, பாதி மாதொடு கூடிய பரம்பரன் - தன் திருமேனியின் பாதியில் உமையம்மையோடும் கூடிய மிக்க மேலோனும், நிரந்தரமாய் நின்ற ஆதி - என்றும் அழியாது உள்ள முதல்வனுமாகிய சிவபெருமான், ஆண்டு - ஆட்கொண்டருளி, என் அடியான் என்று - என்னுடைய அடியவன் என்று சொல்லி, தன் அடியரில் கூட்டிய -தன் அடியாரொடும் சேர்ந்த, அதிசயம் கண்டாம் - அதிசயத்தைப் பார்த்தோம்.

விளக்கம் : செய்யத் தக்கன இன்ன, செய்யத் தகாதன இன்ன என விதிப்பது நீதி. அந்நெறியில் நிற்கத் துணை புரிவது நல்லோர் கூட்டம். ‘நல்லனவற்றை நினைக்கவும் மாட்டேன்; செய்யவும் மாட்டேன்’ என்பார், ‘நீதியாவன யாவையும் நினைக்கிலேன்; நினைப்பவரொடுங் கூடேன்’ என்றார். பிறப்பு இறப்புப் துன்பமேயன்றி இன்பமில்லையாதலின், ‘ஏதுமே பிறந்திறந் துழல்வேன்றனை’ என்றார். அடியரிற் கூட்டினமையாவது, முத்தியில் சேர்த்ததாம்.

இதனால், நேர்மையும், நல்லார் இணக்கமும் வேண்டும் என்பது கூறப்பட்டது.

2

முன்னை என்னுடை வல்வினை போயிட முக்கண துடையெந்தை
தன்னை யாவரும் அறிவதற் கரியவன் எளியவன் அடியார்க்குப்
பொன்னை வென்றதோர் புரிசடை முடிதனில் இளமதி யதுவைத்த
அன்னை ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.

பதப்பொருள் : முக்கண் உடை எந்தை - மூன்று கண்களையுடைய எம் தந்தையும், தன்னை யாவரும் அறிவதற்கு அரியவன் - தன்னை எல்லோரும் அறிந்துகொள்வதற்கு