பக்கம் எண் :

திருவாசகம்
460


26. அதிசயப்பத்து
(திருப்பெருந்துறையில் அருளியது)

உலகப் பந்தத்தில் கட்டுண்டு கிடந்த தம்மை ஆண்டு அடியார்களுள் ஒருவர் ஆக்கிய திறத்தை வியந்து பாடிய பதிகம்.

முத்தி இலக்கணம்

முத்தி இலக்கணமாவது, வீடு பேற்றின் இயல்பு. வீட்டின்பத்தின் தன்மையைக் கூறியபடியாம்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

வைப்பு மாடென்று மாணிக்கத் தொளியென்று மனத்திடை உருகாதே
செப்பு நேர்முலை மடவர லியர்தங்கள் திறத்திடை நைவேனை
ஒப்பி லாதன உவமனி லிறந்தன ஒண்மலர்த் திருப்பாதத்
தப்பன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.

பதப்பொருள் : வைப்பு மாடு என்று - இறைவனைச் சேமநிதி என்றும், மாணிக்கத்து ஒளியென்று - மாணிக்கத்தின் ஒளியென்றும், மனத்திடை - மனத்தின்கண், உருகாதே - உருகாமல், செப்பு நேர் முலை - கிண்ணம் போன்ற தனங்களையுடைய, மடவரலியர்தங்கள் - இளம்பெண்களினுடைய, திறத்திடை - வசத்தில் நின்று, நைவேனை - வாடுவேனாகிய என்னை, ஒப்பில்லாதன - ஒப்பற்றனவும், உவமனில் இறந்தன - உவமமாகச் சொல்லப்படும் பொருள்களைவிட மேம்பட்டனவும் ஆகிய, ஒள் மலர் - அழகிய தாமரை மலர் போன்ற, திருப் பாதத்து - திருவடியையுடைய, அப்பன் - எம் தந்தையாகிய சிவபெருமான், ஆண்டு - என்னையாட் கொண்டருளி, தன் அடியரில் கூட்டிய - தன் அடியார்களுடன் சேர்த்த, அதிசயம் கண்டாம் - வியப்புச் செயலை நாம் பார்த்தோம்.

விளக்கம் : இளைத்த காலத்துப் பயன்படும் செல்வமாதலின், இறைவனை ‘வைப்பு மாடு’ என்றார். விளக்கு, ஏற்றினால்தான் ஒளியைத் தரும்; மாணிக்கம் அவ்வாறு அன்று. அது எப்பொழுதுமே ஒளியை வீசிக் கொண்டிருக்கும். ஆதலின், இறைவனை ‘மாணிக்கத்தொளி’ என்றார். இறைவனுக்கு ஒத்த இனப்பொருள் வேறொன்றும் இல்லாமையால், அவன் திருவடிகளை, ‘ஒப்பிலாதன’ என்றும், உவமப் பொருள் உவமேயப்பொருளை விடச் சிறப்புடையதாக இருக்க வேண்டும் என்பது இலக்கணமாய் இருக்க, இறைவனாகிய உவமேயப் பொருளுக்கு இவ்வாறு வேறொரு