இதனால், அடியவர் கூட்டச் சிறப்புக் கூறப்பட்டது. 9 வெஞ்சே லனைய கண்ணார்தம் வெகுளி வலையில் அகப்பட்டு நைஞ்சேன் நாயேன் ஞானச் சுடரே நானோர் துணைகாணேன் பஞ்சே ரடியாள் பாகத் தொருவா பவளத் திருவாயால் அஞ்சேல் என்ன ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே. பதப்பொருள் : அம்மானே - தலைவனே, ஞானச் சுடரே - ஞான சூரியனே, பஞ்சு - செம்பஞ்சூட்டிய, ஏர் - அழகிய, அடியாள் - பாதங்களை யுடைய உமையம்மையின், பாகத்து ஒருவா - பங்கினையுடைய ஒப்பற்றவனே, வெம் - விருப்பத்தை உண்டாக்குகின்ற, சேல் அனைய - சேல் மீன் போன்ற, கண்ணார்தம் - கண்களையுடைய மாதர்களின், வெகுளி வலையில் அகப்பட்டு - புலவி வலையில் சிக்கி, நாயேன் நைஞ்சேன் - நாய் போன்ற யான் மெலிந்து போனேன், நான் ஓர் துணை காணேன் - எனக்கு உற்ற துணையும் இல்லை; ஆதலின், பவளத் திருவாயால் - பவளம் போன்ற உன்னுடைய திருவாயினால், அஞ்சேல் என்ன - அஞ்சாதே என்று நீ சொல்ல, ஆசைப்பட்டேன் - விரும்பினேன். விளக்கம் : மாதர்கள் புலவி மயங்கினாரைச் சிக்க வைக்குமாதலின், அதனை வலை என்றார். அகப்பட்டு நைதலாவது, பிரியவும் முடியாது உடனுறையவும் முடியாது வாடுதல். அடியார்களுக்கு அருந்துணையாய் அல்லல் தீர்ப்பவன் இறைவனேயன்றி வேறொருவரும் இல்லையாதலின், ‘நானோர் துணை காணேன்’ என்றும், ஆறுதல்மொழி துன்பக்காலத்தில் வாட்டத்தைப் போக்குமாதலின், ‘அஞ்சேலென்ன ஆசைப் பட்டேன்’ என்றும் கூறினார். இதனால், இறைவன் தன்னை அடைந்தவர்களை ‘அஞ்சற்க’ என்று அருள் செய்து காப்பவன் என்பது கூறப்பட்டது. 10 திருச்சிற்றம்பலம்
|