பதப்பொருள் : அம்மானே - தலைவனே, ஐயாற்று அரசே - திருவையாற்றில் எழுந்தருளிய இறைவனே, உன் கழல் சேவடிகள் - உன் வீரக் கழலணிந்த திருவடிகளை, கையால் தொழுது - கையினால் வணங்கி, கழுமத் தழுவிக்கொண்டு - பொருந்தத் தழுவிக்கொண்டு, எய்யாது - இடைவிடாது, என் தன் தலைமேல் வைத்து - என்னுடைய தலையின்மீது வைத்துக்கொண்டு, எம்பெருமான் பெருமான் - எங்கள் இறைவனே இறைவனே, ஐயா என்று - தலைவனே என்று, என்தன் வாயால் அரற்றி - என்னுடைய வாய் நிரம்பக் கூறி, அழல்சேர் மெழுகு ஒப்ப - நெருப்பினைச் சேர்ந்த மெழுகு போன்று உருக, ஆசைப்பட்டேன் - விரும்பினேன். விளக்கம் : ‘சேவடிகள் கழுமத் தழுவிக்கொண்டு’ என்றதனால், அடிகள் இறைவன்பால் கொண்ட காதல் புலப்படுகிறது. ‘ஐயா என்று என்றன் வாயால் அரற்றி’ என்றதால் ஆராமை தோன்றுகிறது. இவை, தம்மை மறந்த நிலையில் நிகழும் செயல்களாம். ‘ஆரூரா என்றென்றே அலறா நில்லே’ என்ற திருநாவுக்கரசர் வாக்கை ஒப்பிட்டுக்கொள்க. இதனால், இறைவனைப் பல வாகையாலும் வழிபடும் இன்பம் கூறப்பட்டது. 8 செடியா ராக்கைத் திறமற வீசிச் சிவபுர நகர்புக்குக் கடியார் சோதீ கண்டு கொண்டென் கண்ணிணை களிகூரப் படிதா னில்லாப் பரம்பர னேயுன் பழஅடி யார்கூட்டம் அடியேன் காண ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே. பதப்பொருள் : அம்மானே - தலைவனே, படிதான் இல்லா - ஒப்பு இல்லாத, பரம்பரனே - மிக மேலானவனே, செடி ஆர் - குற்றம் பொருந்திய, ஆக்கைத்திறம் - உடம்பின் தன்மையை, அற வீசி - முற்றும் நீக்கி, சிவபுர நகர் புக்கு - சிவபுரம் என்னும் நகரிற்புகுந்து, கடி ஆர் - விளக்கம் நிறைந்த, சோதீ - ஒளியை, கண்டுகொண்டு - பார்த்துக்கொண்டு, அதனோடே, என் கண் இணை - கண்கள் இரண்டும், களி கூர - இன்பம் பெற, உன் பழ அடியார் கூட்டம் - உன்னுடைய பழைய அடியாரின் கூட்டத்தை, அடியேன் காண - அடியேன் காண்பதற்கு, ஆசைப்பட்டேன் - விரும்பினேன். விளக்கம் : இறைவன் ஒருவனே ஒப்பற்றவனாதலின், ‘படிதானில்லாப் பரம்பரனே’ என்றார். ‘இறைவனைக் காண்பதோடு அவனுடைய அடியார்களையும் காண வேண்டும்’ என்பார், ‘பழவடியார் கூட்டம் காண ஆசைப்பட்டேன்’ என்றார்.
|