விளக்கம் : இறைவன் ஏனைய அடியார்களோடு உடன் வருக என்று அழைத்துச் செல்லாது, ‘இங்கே இருக்க’ என்று சொல்லி அடிகளை நிறுத்திச் சென்றமையை நினைத்து, ‘இவ்வாழ்க்கை வைத்தாய்’ என்றும், ‘நீ வைத்தாறே இருந்து அலுத்தேன்’ என்பார், ‘எய்த்தேன்’ என்றும், ‘இந்த அலுப்பை நீக்கி ஆள வேண்டும்’ என்பார், ‘வாங்காய்’ என்றும் கூறினார். உலக வாழ்க்கை நீங்கினால், இளைப்பு நீங்குதல் மட்டும் அன்று; இறைவன் இன்பத்தையும் அனுபவித்தல் கூடும் என்பது, ‘முகவொளி நோக்கி முறுவல் நகை காண’ என்பதனால் விளங்குகின்றது. இதனால், உலக வாழ்க்கையை உயிர்கட்கு அமைப்பவனும் நீக்குபவனும் இறைவனே என்பது கூறப்பட்டது. 6 பாரோர் விண்ணோர் பரவி யேத்தும் பரனே பரஞ்சோதீ வாராய் வாரா வுலகந் தந்து வந்தாட் கொள்வோனே பேரா யிரமும் பரவித் திரிந்தெம் பெருமான் எனஏத்த ஆரா அமுதே ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே. பதப்பொருள் : அம்மானே - தலைவனே, பாரோர் - மண்ணுலகத் தாரும், விண்ணோர் - விண்ணுலகத்தாரும், பரவி ஏத்தும் - வணங்கித் துதிக்கின்ற, பரனே - மேலானவனே, பரஞ்சோதீ - மேலான ஒளிப்பொருளே, வந்து - பக்குவம் அடைந்தவர்கள் முன்னே தோன்றி, வாரா உலகம் தந்து - மீண்டு வருதல் இல்லாத முத்தியைக் கொடுத்து, ஆட்கொள்வோனே - ஆட்கொண்டருள்வோனே, ஆரா அமுதே - தெவிட்டாத அமுதமே, பேர் ஆயிரமும் - உன்னுடைய ஆயிரந் திருநாமங்களையும், பரவித் திரிந்து - துதித்துத் திரிந்து, எம்பெருமான் என ஏத்த - எம்பெருமானே என்று உன்னை வாழ்த்துவதற்கு, ஆசைப்பட்டேன் - விரும்பினேன், வாராய் - வந்து அருள்வாய். விளக்கம் : ஒளிப்பொருள்கட்கும் ஒளியைத் தருபவனாதலின், ‘பரஞ்சோதீ’ என்றார். முத்தியுலகத்துக்குச் சென்றவர் மீண்டும் பிறவிக்கு வரமாட்டாராதலின், அதனை ‘வாரா உலகம்’ என்றார். பேராயிரமும் பரவித் திரிந்து எம்பெருமான் என ஏத்துதல், இறைவனுடைய உலகத்தில் என்க. இறைவன் இன்பம் அனுபவிக்குந்தோறும் புதிதாகவே தோன்றுமாதலின், ‘ஆரா அமுதே’ என்றார். இதனால், இறைவனது திருநாமங்கள் பலவற்றையும் பரவியேத்தும் இன்பம் கூறப்பட்டது. 7 கையால் தொழுதுன் கழற்சே வடிகள் கழுமத் தழுவிக்கொண் டெய்யா தென்றன் தலைமேல் வைத்தெம் பெருமான் பெருமானென் றையா என்றன் வாயா லரற்றி அழல்சேர் மெழுகொப்ப ஐயாற் றரசே ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே.
|