பக்கம் எண் :

திருவாசகம்
456


அளிபுண் ணகத்துப் புறத்தோல் மூடி அடியே னுடையாக்கை
புளியம் பழமொத் திருந்தேன் இருந்தும் விடையாய் பொடியாடீ
எளிவந் தென்னை ஆண்டு கொண்ட என்னா ரமுதேயோ
அளியேன் என்ன ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே.

பதப்பொருள் : அம்மானே - தலைவனே, விடையாய் - இடப வாகனனே, பொடியாடீ - திருவெண்ணீறு அணிவோனே, அடியேனுடை யாக்கை - என்னுடைய உடம்பு, அகத்து - உள்ளே, அளி புண் - அளிந்த புண்ணை உடையதாய், புறம் தோல் மூடி - புறத்தில் தோலால் மூடப்பெற்று, புளியம்பழம் ஒத்து - புளியம்பழத்தைப் போல இருக்கவும், இருந்தேன் - அதன்கண் பற்றுக்கொண்டு இருந்தேன், இருந்தும் - அவ்வாறு இருந்தும், எளிவந்து - எளிமையாய் வந்து, என்னை ஆண்டுகொண்ட - என்னை ஆட்கொண்டருளின, என் ஆர் அமுதே - எனது அருமையான அமுதமே, ஓ - ஓலம், அளியேன் என்ன - இனியும் நீ இவன் இரங்கத்தக்கவன் என்று சொல்லி அழைக்க, ஆசைப்பட்டேன் - நான் விரும்பினேன்.

விளக்கம் : புளியம்பழத்தில் புளியும் தோடும், உடம்பில் அகத்தில் உள்ள அளி புண்ணுக்கும், புறத்தில் உள்ள உறுதியான தோலுக்கும் உவமை. ‘ஒப்ப’ என்பது ‘ஒத்து’ என நின்றது. இழிவு சிறப்பும்மை மறைந்தது. ‘எனது தகுதியின்மை தெரிந்தும் முன்பே வந்து ஆட்கொண்டது போலவே இனியும் என்னை உன்பால் அழைத்துக்கொள்ள வேண்டும்’ என்பார், ‘அளியேன் என்ன ஆசைப்பட்டேன்’ என்றார்.

இதனால், சிறியோரையும் இரங்கி ஆட்கொள்பவன் இறைவன் என்பது கூறப்பட்டது.

5

எய்த்தேன் நாயேன் இனியிங் கிருக்க கில்லேன் இவ்வாழ்க்கை
வைத்தாய் வாங்காய் வானோர் அறியா மலர்ச்சே வடியானே
முத்தா உன்றன் முகவொளி நோக்கி முறுவல் நகைகாண
அத்தா சால ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே.

பதப்பொருள் : அம்மானே - தலைவனே, வானோர் அறியா - தேவரும் அறியாத, மலர் - தாமரை மலர் போன்ற, சேவடியானே - திருவடியையுடையவனே, முத்தா - இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கியவனே, அத்தா - தந்தையே, இவ்வாழ்க்கை வைத்தாய் - இவ்வுலக வாழ்க்கையை எனக்கு அமைத்தாய், நாயேன் - நாயைப் போன்ற யான், எய்த்தேன் - இளைத்துப் போனேன், இனி இங்கு இருக்ககில்லேன் - இனி இவ்வுலகில் வாழ மாட்டேன், உன்றன் முக ஒளி நோக்கி - உன்னுடைய முகத்தினது அருளொளியைக் கண்டு, முறுவல் நகை காண - புன்சிரிப்பினைப் பார்ப்பதற்கு, சால ஆசைப் பட்டேன் - மிகவும் விரும்பினேன், வாங்காய் - இவ்வாழ்க்கையை நீக்குவாய்.