பக்கம் எண் :

திருவாசகம்
455


அழைத்துக்கொள்வாய், சிறிது என் முகம் நோக்கி - சற்றே என்னுடைய முகத்தைப் பார்த்து, ஆவா என்ன - ஐயோ என்று இரங்கியருள வேண்டும் என்று, ஆசைப்பட்டேன் - நான் விரும்பினேன்.

விளக்கம் : உடம்பின்கண் உள்ள அருவருப்பைக் காட்ட ‘’சீவார்ந் தீமொய்த் தழுக்கோடு திரியும்’’ என்றார். இறைவனைச் சார்ந்து இன்பமடைய விரும்புவோர், இவ்வுடம்பில் தங்கித் துன்பமடைய விரும்பாராதலின், ‘இது சிதையக் கூவாய்’ என்றார். ‘இது’ என்றது உடலை. ‘முகம் நோக்கி ஆவா என்ன’ என்றது, ‘என்னைக் குறிக்கொண்டு சிறிது கருணை பாலிக்க வேண்டும்’ என்பதாம்.

இதனால், இறைவன் கருணையே வேண்டப்படுவது என்பது கூறப்பட்டது.

3

மிடைந்தெலும் பூத்தை மிக்கழுக் கூறல் வீறிலி நடைக்கூடந்
தொடர்ந்தெனை நலியத் துயருறு கின்றேன் சோத்தம்எம் பெருமானே
உடைந்துநைந் துருகி யுன்னொளி நோக்கி உன்திரு மலர்ப்பாதம்
அடைந்துநின் றிடுவான் ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே.

பதப்பொருள் : அம்மானே - தலைவனே, எம்பெருமானே - எம் இறைவனே, சோத்தம் - வணக்கம், எலும்பு மிடைந்து - எலும்புகள் நெருங்கி, ஊத்தை மிக்கு - புலால் மிகுந்து, அழுக்கு ஊறல் - அழுக்கு ஊறி நிற்பதாயுள்ள, வீறிலி - சிறப்பில்லாத, நடைக்கூடம் - நடை வீடாகிய இவ்வுடம்பு, தொடர்ந்து - விடாது பற்றி, எனை நலிய - என்னை வருத்த, துயர் உறுகின்றேன் - துன்பமடைகின்றேன்; ஆதலின், உடைந்து நைந்து உருகி - மனம் வருந்தி நெகிழ்ந்து உருகப்பெற்று, உன் ஒளி நோக்கி - உன்னருள் ஒளியைக் கண்டு, உன் திருமலர்ப்பாதம் - உனது அழகிய மலர் போன்ற திருவடியை, அடைந்து நின்றிடுவான் - அடைந்து நிலைபெற்றிருக்கும்பொருட்டு, ஆசைப்பட்டேன் - விரும்பினேன்.

விளக்கம் : வீடு, பெயர்ந்து செல்லாது; ஆனால் இவ்வுடம்பாகிய வீடு, செல்லுமிடமெல்லாம் தொடர்ந்து வருவதாதலின், இதனை ‘நடைக்கூடம்’ என்றும், ‘தொடர்ந்து’ என்றும் கூறினார். உடம்பினால்தான் உயிருக்குத் துன்பங்கள் வருகின்றவனவாதலின், ‘எனை நலியத் துயருறுகின்றேன்’ என்றார். உள்ளம் உருகுதல், அருளைப் பெறுதற்குரிய வழி, ஒளி நோக்குதல், அருளையுடைய இறைவனை அடைதற்குரிய வழி. பாதம் அடைதல், பேரின்பம் பெறுதல். சாதனம், பயன் கூறியபடியாம்.

இதனால், மனம் இளகி உருகுதலே இறைவன் திருவடியை அடைதற்குரிய வழி என்பது கூறப்பட்டது.

4