பக்கம் எண் :

திருவாசகம்
454


மொய்ப்பால் நரம்பு கயிறாக மூளை என்பு தோல்போர்த்த
குப்பா யம்புக் கிருக்ககில்லேன் கூவிக் கொள்ளாய் கோவேயோ
எப்பா லவர்க்கும் அப்பாலாம் என்னார் அமுதேயோ
அப்பா காண ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே.

பதப்பொருள் : அம்மானே - தலைவனே, கோவே - இறைவனே, எப்பாலவர்க்கும் - எப்பகுதியிலுள்ளோர்க்கும், அப்பாலாம் - அப்பாலுள்ள, என் ஆர் அமுதே - எனது அருமையான அமுதமே, அப்பா - அப்பனே, மொய்ப்பால் - நெருக்கமான பகுதியாகிய, நரம்பு கயிறாக - நரம்புகளையே கயிறாகக்கொண்டு, மூளை என்பு - மூளை, எலும்பு இவைகளைப் பிணித்து, தோல் போர்த்த - தோலால் போர்த்து அமைத்த, குப்பாயம் - உடம்பாகிய சட்டைக்குள்ளே, புக்கு இருக்க கில்லேன் - புகுந்து இருக்க மாட்டேன், காண ஆசைப்பட்டேன் - உன்னைக் காண விரும்பினேன், கூவிக்கொள்ளாய் - என்னை அழைத்துக் கொள்வாய்.

விளக்கம் : ‘மொய்ப்பால் நரம்பு கயிறாக’ என்பது முதலியவற்றால், உடம்பின் இழிவை விளக்கினார். பல வகைத் துணிகளை நூலால் தைத்து அணியப்படும் சட்டை போன்று, மூளை எலும்பு முதலியவற்றை நரம்பால் பிணித்து ஆக்கப்பட்டது இந்த உடம்பு என்பது பற்றி, ‘குப்பாயம்’ என உருவகப்படுத்தினார். தேவர்களுக்கும், அவர்கட்கு மேற்பட்ட அயன் மால் என்பவர்கட்கும், அவர்களினும் மேம்பட்ட பதமுத்தியை அடைந்தவர்கட்கும், அவரினும் மேலாய அபர முத்தர்கட்கும் அப்பாலுள்ளவன் இறைவன் ஆதலின், ‘எப்பாலவர்க்கும் அப்பாலாம்’ என்றார். காண விழைந்தது, சிவலோகத்தில் இறைவன் தன் அடியார் பலரும் சேவிக்க இருக்கும் காட்சியே ஆகும்.

இதனால், உடம்பின் இழிவு கூறப்பட்டது.

2

சீவார்ந் தீமொய்த் தழுக்கோடு திரியும் சிறுகுடில் இதுசிதையக்
கூவாய் கோவே கூத்தா காத்தாட் கொள்ளுங் குருமணியே
தேவா தேவர்க் கரியானே சிவனே சிறிதென் முகநோக்கி
ஆவா என்ன ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே.

பதப்பொருள் : அம்மானே - தலைவனே, கோவே - இறைவனே, கூத்தா - கூத்தனே, காத்து ஆட்கொள்ளும் - காத்து அடிமை கொள்ளுகின்ற, குரு மணியே - மேலான குருமூர்த்தியே, தேவா - தேவனே, தேவர்க்கு அரியானே - தேவர்களுக்கு அருமையானவனே, சிவனே - சிவபெருமானே, சீ வார்ந்து - சீ ஒழுகி, ஈ மொய்த்து - ஈக்களால் மொய்க்கப்பட்டு, அழுக்கோடு திரியும் - அழுக்கோடு அலைகின்ற, சிறு குடில் - சிறிய குடிசையாகிய, இது சிதைய - இவ்வுடம்பு அழிய, கூவாய் - என்னை