பக்கம் எண் :

திருவாசகம்
453


25. ஆசைப்பத்து
(திருப்பெருந்துறையில் அருளியது)

இறைவன் திருவடியை அடைய அவாவுற்றமையை அருளிச் செய்த பதிகம்.

ஆத்தும இலக்கணம்

ஆன்மாவின் சொரூப இலக்கணம். அஃதாவது, இறைவனை அடைய விரும்புவதே ஆன்மாவின் இயற்கை என்பதைக் கூறுவதாம்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

கருடக் கொடியோன் காண மாட்டாக் கழற்சே வடியென்னும்
பொருளைத் தந்திங் கென்னை யாண்ட பொல்லா மணியேயோ
இருளைத் துரந்திட் டிங்கே வாவென் றங்கே கூவும்
அருளைப் பெறுவான் ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே.

பதப்பொருள் : அம்மானே - தலைவனே, கருடக்கொடியோன் - கருடக்கொடியையுடையவனாகிய, திருமாலும், காணமாட்டா - காணமுடியாத, கழல் - வீரக்கழலையணிந்த, சேவடி என்னும் - திருவடி என்கிற, பொருளை - செல்வத்தை, தந்து - கொடுத்து, இங்கு - இவ்விடத்தில், என்னை ஆண்ட - என்னை ஆட்கொண்ட, பொல்லா மணியே ஓ - துளையிடாத மாணிக்கமே ஓலம்! இருளைத் துரந்திட்டு - எனது அறியாமையைப் போக்கி, இங்கே வா என்று - இவ்விடத்தே வருவாய் என்று, அங்கே கூவும் - அவ்விடத்திற்கு என்னை அழைக்கின்ற, அருளைப் பெறுவான் - உன்னுடைய திருவருளைப் பெறுவதற்காக, ஆசைப்பட்டேன் - யான் விரும்பினேன்.

விளக்கம் : வேண்டுவனவற்றையெல்லாம் தர வல்லனவாதலின், கழற்சேவடியைப் ‘பொருள்’ என்றார். இருள் என்றது, இங்கு, இறைவனோடு உடன் சென்று அனுபவிக்கும் இன்பத்தை விரும்பாமல், இவ்வுலகத்தில் இருந்து வாழ விரும்பியதேயாகும். ‘இப்படிப்பட்ட எனது அறியாமையை நீக்கி, ‘நீ என் அருகில் வா’ என்று அன்போடு அழைத்து, எனக்கு உன் வீட்டுலகத்தைத் தர வேண்டும்’ என்பார். ‘இங்கே வா என்று அங்கே கூவும் அருள்’ என்றார். ‘கண்டாய்’ முன்னிலை அசை.

இதனால், உலக மாயையை முற்றிலும் நீக்க வல்லவன் இறைவனே என்பது கூறப்பட்டது.

1