பக்கம் எண் :

திருவாசகம்
466


உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர் எழுதரு நாற்றம்போல்
பற்ற லாவதோர் நிலையிலாப் பரம்பொருள் அப்பொருள் பாராதே
பெற்ற வாபெற்ற பயனது நுகர்ந்திடும் பித்தர்சொல் தெளியாமே
அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.

பதப்பொருள் : உற்ற - வினை வசத்தால் உண்டான, ஆக்கையின் உறுபொருள் - உடம்பில் பொருந்திய மெய்ப்பொருள், நறுமலர் - நல்ல மலரின்கண், எழுதரு - உண்டாகின்ற, நாற்றம் போல் - நறுமணம் போல, பற்றல் ஆவது - பற்றுதற்கேற்ற, ஓர் நிலை இல்லா - ஒரு தன்மையில்லாத, பரம்பொருள் - மேன்மையான பொருளாம், அப்பொருள் - அந்தப் பொருளாகிய இறைவனை, பாராதே - பார்க்காமல், பெற்ற பயன் - அடைந்த பயனை, பெற்றவா நுகர்ந்திடும் - பெற்றவாறே அனுபவிக்கின்ற, பித்தர் சொல் தெளியாமே - அறிவில்லாதவர்களுடைய சொற்களை நம்பாதிருக்க, அத்தன் - எம் தந்தையாகிய சிவபெருமான், ஆண்டு - என்னை ஆட்கொண்டருளி, தன் அடியரில் கூட்டிய - தன் அடியார்களோடு சேர்த்த, அதிசயம் கண்டாம் - அதிசயத்தைக் கண்டோம்.

விளக்கம் : உற்ற ஆக்கையின் உறு பொருள் என்பது இறைவனை. ‘இறைவனே உடலிடங் கொண்டாய்’ என்று முன்னர்க் கூறியதையுங்காண்க. ‘பூவினுள் மணம் நிறைந்துள்ளது போல, இறைவனும் உடம்பினுள் நிறைந் திருக்கிறான்’ என்பார், ‘நறுமலர் எழுதரு நாற்றம் போல்’ என்றார். இனி, ‘பூவினுள் மணத்தைக் காண முடியாதது போல, உடம்பினுள் உத்தமனைக் காண முடியாது’ என்பார், ‘பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள்’ என்றார்.

பெற்றவா நுகர்தல் என்பது, மாற்றியமைக்கின்ற வழி உணராது, அடைந்த சிற்றின்பத்தையே பெரிதென மகிழ்ந்திருக்கும் பெற்றியைக் கூறித்தது.

இதனால், பரம்பொருளினது இயல்பு கூறப்பட்டது.

9

இருள்தி ணிந்தெழுந் திட்டதோர் வல்வினைச் சிறுகுடி லிது;இத்தைப்
பொருளெ னக்களித் தருநர கத்திடை விழுப்புகு கின்றேனைத்
தெருளும் மும்மதில் நொடிவரை இடிதரச் சினப்பதத் தொடுசெந்தீ
அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயங் கண்டாமே.

பதப்பொருள் : இருள் திணிந்து - அறியாமை மிகுந்து, எழுந்திட்டது - எழுந்ததாகிய, வல்வினை - கொடிய வினைகளையுடைய, ஓர் சிறு குடில் இது - ஒரு சிறிய குடிசை இவ்வுடம்பு; இத்தை - இதனை, பொருள் என - நிலையான பொருள் என்று