கருதி, களித்து - மகிழ்ந்து, அருநரகத்திடை - பொறுத்தற்கு அரிய துன்பத்தை யுடைய நரகத்தில், விழப்புகுகின்றேனை - விழப்போகின்ற என்னை, தெருளும் - தெளிவாகக் காணப்பட்ட, மும்மதில் - முப்புரத்தை, நொடிவரை - நொடியளவில், இடிதர - தகர்ந்து போகும்படி, சினப்பதத்தொடு - கோபக் குறியோடு, செந்தீ அருளும் - செம்மை நிறமாகிய தீயினை அருளிய, மெய்ந்நெறி - உண்மை நெறியாகிய இறைவன், பொய்ந்நெறி நீக்கிய - அழிவு நெறியைப் போக்கிய, அதிசயம் கண்டாம் - அதிசயத்தைப் பார்த்தோம். விளக்கம் : அறியாமையால் பிறப்பு உண்டாகுமாதலின், ‘இருள் திணிந்து எழுந்திட்டதோர் சிறு குடில்’ என்றார். ‘பிறப்பென்னும் பேதைமை நீங்க’ என்ற நாயனார் மறை மொழியையும் காண்க. கொடிய வினைகளுக்கு இருப்பிடமாதலின், உடம்பை ‘வல்வினைச் சிறுகுடில்’ என்றார். ‘வினைப்போகமே ஒரு தேகம் கண்டாய்’ என்றார் பிறரும். வானத்தில் எல்லோரும் காணப் பறந்து சென்றமையின் முப்புரத்தை, ‘தெருளும் மும்மதில்’ என்றார். உண்மை நெறியே வடிவமாகவுடையவன் இறைவனா தலின், ‘மெய்ந்நெறி’ என்றார். ‘நெறியே நின்மலனே’ என்றார் சுந்தரரும். இதனால், பிறவிக்குக் காணரமாகிய வினை இறைவன் திருவருளாலே நீங்கும் என்பது கூறப்பட்டது. 10 திருச்சிற்றம்பலம்
|