பக்கம் எண் :

திருவாசகம்
468


27. புணர்ச்சிப்பத்து
(திருப்பெருந்துறையில் அருளியது)

இறைவனோடு இரண்டறக் கலந்திருத்தலை விரும்பிப் பாடிய பதிகம்.

அத்துவித இலக்கணம்

இறைவனோடு உயிர் உடனாய்க் கலந்திருத்தலே அத்துவிதமாம். இது ‘இருமையில் ஒருமை’ எனப்படும். இக்கலப்பினையே இத்திருப்பதிகத்தில் அடிகள் அருளிச்செய்கின்றார்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

சுடர்பொற் குன்றைத் தோளா முத்தை வாளா தொழும்புகந்து
கடைபட் டேனை ஆண்டுகொண்ட கருணா லயனைக் கழுமால் பிரமன்
தடைபட் டின்னுஞ் சார மாட்டாத் தன்னைந் தந்தஎன் ஆரமுதைப்
புடைபட் டிருப்ப தென்று கொல்லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே.

பதப்பொருள் : சுடர் - ஒளி விடுகின்ற, பொற்குன்றை - பொன் மலையைப் போன்றவனும், தோளா முத்தை - துளைக்கப்படாத முத்தைப் போன்றவனும், வாளா - காரணமின்றி, தொழும்பு உகந்து - எனது தொண்டினை விரும்பி, கடை பட்டேனை - கடையாய நிலையில் உள்ள என்னை, ஆண்டு கொண்ட - ஆட்கொண்டருளின, கருணாலயனை - கருணைக்கு இருப்பிடமானவனும், கருமால் பிரமன் - கரிய நிறமுடைய திருமாலும் பிரமனும், தடைபட்டு - செருக்கில் அகப்பட்டு, இன்னும் சாரமாட்டா - இன்னும் அடைய முடியாத, தன்னைத் தந்த - தன்னை எனக்கு அறியும்படி கொடுத்த, என் ஆர் அமுதை - என் அரிய அமுதம் போன்றவனும், என் பொல்லா மணியை - செதுக்கப்படாத - மாணிக்கம் போன்றவனுமாகிய என் இறைவனை, புணர்ந்து - சேர்ந்து, புடைபட்டிருப்பது - அவனிடத்திலே பொருந்தியிருப்பது, என்று கொல்லோ - எந்நாளோ?

விளக்கம் : முத்துத் துளைக்கப்பட்டே பயனைத் தரும்; இறைவனோ இயல்பாகவே பயனைத் தருபவனாதலின், ‘தோளா முத்தே’ என்றும், மணி செதுக்கினால்தான் ஒளியையுடையதாகும். இறைவன் இயல்பாகவே ஒளியை யுடையவனாதலின், ‘பொல்லா மணியை’ என்றும் கூறினார். ‘என் பொல்லா மணியை‘ என்றது, உரிமை பற்றியாம். ‘கடைபட்ட, தடைபட்ட’ என்பவற்றில் எதுகை நோக்கி, ஒற்று, மிகாதாயிற்று.