நெருப்புப் போன்றவனே, சிவபுரத்து அரசே - சிவலோகநாதனே, திருப்பெருந்துறையுறை சிவனே - திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே, அந்தம் இல் அமுதே - அழிவில்லா அமுதமே, அரும் பெரும்பொருளே - அருமையான பரம்பொருளே, ஆர் அமுதே - அருமையான அமுதமே, அடியேனை வந்து உய ஆண்டாய் - நீயே வந்து அடியேனை உய்யும்வண்ணம் ஆட்கொண் டருளினை; வாழ்கிலேன் - இவ்வுலகில் வாழ மாட்டேன்; வருக என்று - வருவாய் என்றழைத்து, அருள்புரிவாய் - அருள் புரிவாயாக! விளக்கம் : செந்தழல் என்றதனால், இறைவனது திருமேனிக்கு நெருப்பு உவமையாதல் செம்மை நிறம் பற்றியே என்பது விளங்குகின்றது. ‘அந்தமில் அமுதே’ என்றதனால் இறைவனுடைய அழிவின்மையையும், ‘ஆரமுதே’ என்றதனால், பிறரை வாழ வைக்கும் தன்மையினையும் கூறிய படியாம். தம்மை வாழ வைக்க வந்த பெருமான் பேரின்ப வாழ்வு நல்க வேண்டும் என விரும்புவார், ‘வந்துய ஆண்டாய் வாழ்கிலேன் வருக என்றருள் புரியாயே’ என்றார். இதனால், இறைவனே பேரின்ப வாழ்வு அளிக்க வல்லவன் என்பது கூறப்பட்டது. 8 பாவநா சாஉன் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் தேவர்தந் தேவே சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே மூவுல குருவ இருவர்கீழ் மேலாய் முழங்கழ லாய்நிமிர்ந் தானே மாவுரி யானே வாழ்கிலேன் கண்டாய் வருகஎன் றருள்புரி யாயே. பதப்பொருள் : பாவநாசா - பாவத்தை நீக்குபவனே, தேவர்தம் தேவே - தேவர்க்கும் தலைவனே, சிவபுரத்து அரசே - சிவலோகநாதனே, திருப் பெருந்துறையுறை சிவனே - திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெரு மானே, மூவுலகு உருவ - மூன்று உலகங்களும் ஊடுருவும்வண்ணம், இருவர் - திருமால் பிரமனாகிய இருவரும், கீழ் மேல் ஆய் - கீழும் மேலுமாய்த் தேட, முழங்கு அழல் ஆய் - ஒலிக்கின்ற அனற்பிழம்பாகி, நிமிர்ந்தானே - வளர்ந்தவனே, மா உரியானே - யானைத் தோலுடையானே, உன் பாதமே அல்லால் - உன் திருவடியேயன்றி, நான் மற்றுப் பற்று இலேன் - யான் வேறு ஒரு பற்றுக்கோடு இல்லேன்; வாழ்கிலேன் - இவ்வுலகில் வாழ மாட்டேன்; வருக என்று - வருவாய் என்றழைத்து, அருள் புரியாய் - அருள் புரிவாயாக. விளக்கம் : ‘முழங்கழலாய் நிமிர்ந்தானே’ என்றதும், ‘மாவுரியானே’ என்றதும் இறைவனது பேராற்றலை விளக்க வந்த
|