விளிகளாம். பேராற்றலை யுடைய பெருமான் தம்முடைய வினையைப் போக்கி வீடுபேற்றினை நல்க வேண்டும் என வேண்டியபடியாம். அழலுக்கு ஒலியுண்டு என்பது தெளிவு. மாவுரியானே என்றதற்குப் புலித்தோலையுடையானே எனலும் ஆம். இதனால், இறைவன் பேராற்றல் உடையவன் என்பது கூறப்பட்டது. 9 பழுதில்தொல் புகழாள் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செழுமதி அணிந்தாய் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கோர் துணையென நினைவனோ சொல்லாய் மழவிடை யானே வாழ்கிலேன் கண்டாய் வருகஎன் றருள்புரி யாயே. பதப்பொருள் : பழுது இல் - குற்றம் இல்லாத, தொல்புகழாள் - தொன்மையான புகழையுடைய உமையம்மையின், பங்க - பங்கனே, மழவிடையானே - இளங்காளையை ஊர்தியாகவுடையவனே, செழுமதி அணிந்தாய் - செழுமையாகிய பிறையை அணிந்தவனே, சிவபுரத்து அரசே - சிவலோக நாதனே, திருப்பெருந்துறையுறை சிவனே - திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே, நீ அல்லால் - உன்னையன்றி, நான் மற்றுப் பற்று இலேன் - யான் வேறு ஒரு பற்றுக்கோடும் இல்லேன் ஆதலால், பிறரைத் தொழுவனோ - பிற தெய்வங்களை வணங்குவேனோ? துதிப்பனோ - வாயால் வாழ்த்துவேனோ? எனக்கு ஓர் துணை என நினைவனோ - எனக்கு ஒரு துணை என்று மனத்தால் நினைப்பேனோ? சொல்லாய் - சொல்வாயாக; வாழ்கிலேன் - இவ்வுலகத்தில் வாழ மாட்டேன்; வருக என்று - வருவாய் என்று அழைத்து, அருள் புரியாய் - அருள்புரிவாயாக. விளக்கம் : அடைக்கலமாகத் தன்னை வந்தடைந்த சந்திரனுக்கு அருள் புரிந்து முடியின்மேல் அணிந்துகொண்ட பெருமான் இறைவன். அதனால் பிற தெய்வங்களை அடையாது உன்னையே தஞ்சம் என்று வந்து அடைந்த என்னையும் காத்து வீடுபேறு அருள வேண்டும் என்பதாம். ‘தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கோர் துணையென நினைவனோ’ என்றது, முக்கரண வழிபாடும் சிவனுக்கேயுரியன என்றபடி. இதனால், சிவபரம்பொருளையே தஞ்சம் என்று அடைவது வீடு பேற்றுக்குரிய உபாயம் என்பது கூறப்பட்டது. 10 திருச்சிற்றம்பலம்
|