பக்கம் எண் :

திருவாசகம்
488


நிழலைப் பொருந்திய, சீர் - சிறப்பையுடைய, அடிகளே - கடவுளே, அடியேன் ஆதரித்து அழைத்தால் - அடியேனாகிய யான் அன்போடு அழைத்தால், அதெந்துவே என்று அருளாய் - அஞ்சாதே என்று சொல்லி அருள் புரிவாயாக.

விளக்கம் : சுவடு புள்ளிக்கும், பொடி வெண்ணீற்றுக்கும், தழல் திருமேனிக்கும் உவமையாயின. இறைவனது செம்மேனியிலுள்ள திருநீற்றில் அம்மையின் தனங்களின் சுவடுகள் விளங்குகின்றன என்பதாம்.

காஞ்சீபுரத்தில் கம்பையாற்றங்கரையில் உமையம்மை இறைவனைப் பூசித்தகாலை வெள்ளம் வந்துவிட, தன் தனங்களின் கண்கள் இறைவனது மார்பிலே பதியும்படி தழுவிய புராண வரலாறு குறிக்கப்பெற்றது.

இதனால், இறைவன், வழிபாட்டினை விரும்புபவன் என்பது கூறப்பட்டது.

5

துப்பனே தூயாய் தூயவெண் ணீறு
துதைந்தெழு துளங்கொளி வயிரத்
தொப்பனே உன்னை உள்குவார் மனத்தின்
உறுசுவை யளிக்கும்ஆ ரமுதே
செப்பமாம் மறைசேர் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அப்பனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.

பதப்பொருள் : துப்பனே - பவளம் போன்றவனே, தூயாய் - தூய்மை யானவனே, தூய வெண் நீறு - தூய்மையான திருவெண்ணீறு, துதைந்து எழு - படிந்து தோன்றுகின்ற, துளங்கு ஒளி - விளக்கமாகிய ஒளி, வயிரத்து ஒப்பனே - வயிரம் போன்று பிரகாசிப்பவனே, உன்னை உள்குவார் மனத்தில் - உன்னை இடைவிடாது நினைக்கிறவர் மனத்தில், உறு சுவை அளிக்கும் - மிகுந்த சுவையைக் கொடுக்கின்ற, ஆர் அமுதே - அரிய அமுதமே, செப்பம் ஆம் - திருத்தமாகிய, மறை சேர் - வேதங்கள் ஒலிக்கின்ற, திருப்பெருந்துறையில் - திருப்பெருந்துறையின்கண், செழுமலர் - செழுமையான மலர்களையுடைய, குருந்தம் மேவிய - குருந்த மரநிழலைப் பொருந்திய, சீர் அப்பனே - சிறந்த தந்தையே, அடியேன் ஆதரித்து அழைத்தால் - அடியேனாகிய யான் அன்போடு அழைத்தால், அதெந்துவே என்று அருளாய் - அஞ்சாதே என்று சொல்லி அருள் புரிவாயாக!

விளக்கம் : இறைவனது காட்சி கவர்ச்சியுடையது என்பதை, ‘வயிரத்து ஒப்பனே’ என்றதால் குறித்தார். மேலும் நினைப்பவர் மனத்தில் தேனாய் இன்னமுதாய்த் தித்திப்பான் என்பவை,