கார்மேகம் போன்ற நிறத்தை யுடைய திருமாலும், நண்ணுதற்கு அரிய - அடைவதற்கு அருமையான, விமலனே - தூயவனே, எமக்கு வெளிப்படாய் என்ன - எங்களுக்கு வெளிப்பட்டுத் தோன்ற வேண்டும் என்று வேண்ட, வியன்தழல் - பெரிய அழலுருவத்திலிருந்து, வெளிப்பட்ட - தோன்றிய, எந்தாய் - எந்தையே, திமிலம் - பேரொலியையுடைய, நான்மறை சேர் - நான்கு வேதங்களும் பயில்கின்ற, திருப்பெருந்துறையில் - திருப்பெருந்துறையின்கண், செழுமலர் - செழுமையான மலர்களையுடைய, குருந்தம் மேவிய - குருந்தமர நிழலைப் பொருந்திய, சீர் - சிறப்புடைய, அமலனே - மாசு இல்லாதவனே, அடியேன் ஆதரித்து அழைத்தால் - அடியேனாகிய யான் அன்போடு அழைத்தால், அதெந்துவே என்று அருளாய் - அஞ்சாதே என்று சொல்லி அருள் புரிவாயாக. விளக்கம் : படைத்தற்கடவுளாகிய பிரமனும் காத்தற்கடவுளாகிய திருமாலும் அடிமுடி தேடி இளைத்து வெளிப்பட வேண்டும் என்று வேண்டிய போது, அவர்கள் முன் நின்று தழலுருவத்திலிருந்து சிவபெருமான் தோன்றியருளினமையின், ‘வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்’ என்றார். ‘நான்மறைசேர் திருப்பெருந்துறை’ என்றதால், வேதவொலிகள் முழங்குகின்றன என்பதாம். இதனால், இறைவன் செருக்கு நீங்கி வழிபட்டால் வெளிப்படுவான் என்பது கூறப்பட்டது. 4 துடிகொள்நே ரிடையாள் சுரிகுழல் மடந்தை துணைமுலைக் கண்கள்தோய் சுவடு பொடிகொள்வான் தழலிற் புள்ளிபோல் இரண்டு பொங்கொளி தங்குமார் பினனே செடிகொள்வான் பொழில்சூழ் திருப்பெருந் துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர் அடிகளே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே. பதப்பொருள் : துடிகொள் - உடுக்கை வடிவம் கொண்ட, நேர் இடையாள் - நுண்ணிய இடையினையுடையாளாகிய, சுரிகுழல் மடந்தை - சுருண்ட கூந்தலையுடைய உமையம்மையின், துணை - இரண்டு, முலைக் கண்கள் தோய் - தனங்களின் கண்கள் அழுந்திய, சுவடு - தழும்புகள், பொடி கொள் - நீறு பூத்த, வான்தழல் - பெரிய நெருப்பின்மேல் உள்ள, இரண்டு புள்ளிபோல் - இரண்டு புள்ளிகளைப் போல், பொங்கு ஒளி தங்கும் - மிக்க ஒளி பொருந்திய, மார்பினனே - திரு மார்பையுடையவனே, செடிகொள் - செடிகள் அடர்ந்துள்ள, வான்பொழில் சூழ் - பெரிய சோலைகள் சூழ்ந்த, திருப்பெருந்துறையில் - திருப்பெருந்துறையின்கண், செழுமலர் - செழுமையான மலர்களையுடைய, குருந்தம் மேவிய - குருந்தமர
|