பக்கம் எண் :

திருவாசகம்
49


யொழிய, வாணிகத்தின் பொருட்டன்று; அதனால் அப்பொன்னை அவன் பெறவில்லை.

அந்தண னாகி யாண்டுகொண் டருளி
இந்திர ஞாலங் காட்டிய இயல்பும்

பதப்பொருள் : அந்தணண் ஆகி - வேதியனாகி, ஆண்டு கொண்டு அருளி - அடியேனை ஆட்கொண்டருளி, இந்திர ஞாலம் காட்டிய இயல்பும் - மாயம் செய்து மறைந்த தன்மையும்

விளக்கம் : இறைவன் திருப்பெருந்துறையிலே அந்தண வடிவங் கொண்டு அடிகளை ஆட்கொண்டு அருள் செய்தான். ஆனால், மாணவர் பலர் புடைசூழ வந்து அருள் செய்த பின்னர் அவர்களுடன் அவன் மறைந்தருளினான். அது அடிகளுக்குப் பெருமாயமாய்த் தோன்றிற்றாதலால், தம்மை ஆண்டுகொண்டருளியதை இந்திர ஞாலம் காட்டியதாகக் கூறினார்.

மதுரைப் பெருநன் மாநக ரிருந்து

45. குதிரைச் சேவக னாகிய கொள்கையும்

பதப்பொருள் : மதுரைப் பெருநன் மாநகர் இருந்து - மதுரையாகிய பெரிய நல்ல பெருமை வாய்ந்த நகரத்திலிருந்து, குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும் - குதிரை வீரனாய் வந்த கோட்பாடும்.

விளக்கம் : அடிகளுக்காக மதுரை மாநகரில் இறைவன் குதிரை வீரனாய் வந்தது முன்னே சொல்லப்பட்டமையால், இது மற்றொரு வரலாறாதல் வேண்டும்.

ஆங்கது தன்னி லடியவட் காகப்
பாங்காய் மண்சுமந் தருளிய பரிசும்

பதப்பொருள் : ஆங்கது தன்னில் - அந்த மதுரை நகரத்தில், அடியவட்கு ஆக - அடியவளாகிய வந்தி என்பவள் பொருட்டு, பாங்காய் மண் சுமந்து அருளிய பரிசும் - பாங்குடனே மற்றவர்களுடன் மண் சுமந்தருளிய விதமும்.

விளக்கம் : மண் சுமந்தது :

பிட்டு விற்றுப் பிழைக்கும் வந்தி என்பவளது அன்பு வெளிப்பட இறைவன் அவ்வம்மையின் ஆளாய் எழுந்தருளி, வெள்ளத்தால் உடைப்புற்ற வையையாற்றங்கரையை அடைக்க வந்தான்; கரையையடைக்காது, இன்பப் பிட்டுண்டு, திருமுடியில் மண் சுமந்து, பல விளையாட்டுகளைப் புரிந்தான். பாண்டியன் அது கண்டு பொறுக்காது கோலால் ஓச்ச, அவ்வடி அப்பாண்டியனுட்பட எல்லோர்மேலும் பட்டது. அவ்வளவில் இறைவன் மறைந்தருளினான். (திருவிளையாடற்புராணம் - பிட்டுக்கு மண் சுமந்த படலம்.)