பக்கம் எண் :

திருவாசகம்
50


உத்திர கோச மங்கையு ளிருந்து
வித்தக வேடங் காட்டிய இயல்பும்

பதப்பொருள் : உத்தரகோச மங்கையுள் இருந்து - திருவுத்தரகோச மங்கையிலிருந்து, வித்தக வேடம் காட்டிய இயல்பும் - ஞான வடிவைக் காட்டிய இயற்கையும்

விளக்கம் : வித்தக வேடம் காட்டியது :

இறைவன் உத்தரகோச மங்கையில் எழுந்தருளி, உமா தேவியார் வணங்கிக் கேட்க, வேதத்தின் பொருளை உபதேசித்தருளினான்; பின்னர்த் தன்னிடம் அன்பு கொண்ட அறுபதினாயிரம் சிவனடியார்களுக்கும் சிவயோகிகளுக்கும் வேதப் பொருளை உபதேசித்தருளி அவர்களுக்கு வீடுபேற்றினை அருளினான். (திருவிளையாடற்புராணம் - வலை வீசின படலம்) உத்தர கோசமங்கை என்னும் ஊர் இராமநாதபுர மாவட்டத்திலுள்ளது.

50. பூவண மதனிற் பொலிந்திருந் தருளித்
தூவண மேனி காட்டிய தொன்மையும்

பதப்பொருள் : பூவணம் அதனில் பொலிந்து இருந்தருளி - திருப்பூவணத்தில் விளங்கியிருந்தருளி, தூவணம் மேனி காட்டிய தொன்மையும் - தூய்மையான அழகிய திருமேனியைப் பொன்னனையாள் என்பவளுக்குக் காட்டிய பழமையும்.

விளக்கம் : இரசவாதம் செய்தது :

திருப்பூவணம் என்ற ஊரில் பொன்னனையாள் என்ற பெண் இறைவனிடத்தும் இறைவனடியார் இடத்தும் பேரன்பு பூண்டு ஒழுகி வந்தாள்; அடியார்க்கு அன்னமிட்டு வழிபாடாற்றுவாள்; இறைவனுக்குப் பொன்னால் திருமேனியமைக்கக் கருதி, இயலாது ஏங்கலானாள். இறைவன் சித்தர் வேடங் கொண்டு, அவள் முன்பு வந்து, அவள் வீட்டிலிருந்த செம்பு முதலிய உலோகங்களாகிய பாத்திரங்களைத் தொகுக்கச் செய்து, மருந்து பூசி நெருப்பிலிடப் பணித்து, மறைந்தருளினான். அவ்வண்ணம் செய்ய, அவையெல்லாம் பொன்னாய் மாறி்ப் பொலிந்தன. பொன்னனையாளும், தான் விரும்பியவாறே இறைவன் திருவுருவைப் பொன்னாற்சமைத்து வழிபாடாற்றி மகிழ்ந்தாள். (திருவிளையாடற்புராணம் - இரசவாதம் செய்த படலம்) திருப்பூவணம் என்ற ஊர் மதுரைக்கு அருகில் உள்ளது.

வாத வூரினில் வந்தினி தருளிப்
பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்

பதப்பொருள் : வாதவூரினில் வந்து இனிது அருளி - திருவாத வூரில் எழுந்தருளி இனிய திருவருளைப் புரிந்து, பாதச்சிலம்பு ஒலி காட்டிய பண்பும் - பாதச்சிலம்பு ஓசையைக் காட்டிய குணமும்.