பக்கம் எண் :

திருவாசகம்
51


விளக்கம் : பாதச் சிலம்பொலி காட்டியது :

இறைவன் அடிகளுக்கு அருள் புரியும்வண்ணம் நரியைக் குதிரையாக்கிக்கொண்டு திருவாதவூரின் கண்ணே திருவடிச் சிலம்பு ஒலியினைத் தோற்றுவித்தருளினான். பெரும்பற்றப் புலியூர் நம்பி திருவிளையாடலில் நரி குதிரையான படலத்துள் இச்செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. திருவாதவூர் என்னும் தலம் மதுரைக்குப் பன்னிரண்டு கல் தொலைவிலுள்ளது.

திருவார் பெருந்துறைச் செல்வ னாகிக்

55. கருவார் சோதியில் கரந்த கள்ளமும்;

பதப்பொருள் : திரு ஆர் பெருந்துறை செல்வனாகி - அழகு நிறைந்த பெருந்துறைக்கு இறைவனாகி, கரு ஆர் சோதியில் கரந்த கள்ளமும் - மேன்மை பொருந்திய ஒளியில் மறைந்த வஞ்சகமும்.

விளக்கம் : சோதியிற்கரந்தது :

இறைவன் திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் குருவாய் எழுந்தருளி, அடிகளுக்கு மெய்ப்பொருள் உபதேசம் செய்து, பின்னர்ப் பேரொளிப்பிழம்பில் மறைந்தமை குறப்பிடப்பட்டது. இறைவன் செல்வன்; சென்றடையாத திருவுடையான். அவ்வாறிருந்தும், கள்ளம் செய்தனன் என்றார். கள்வன் இருளில் மறைபவன்; ஆனால், இக்கள்வனோ, சோதியில் மறைந்தான் என்ற நயமும் காண்க.

பூவல மதனிற் பொலிந்தினி தருளிப்
பாவ நாச மாக்கிய பரிசும்;

பதப்பொருள் : பூவலம் அதனில் இனிது பொலிந்தருளி - திருப்பூவலத்தில் இனிதாக விளங்கியருளி, பாவம் நாசம் ஆக்கிய பரிசும் - பாவத்தை அழித்த விதமும்.

விளக்கம் : திருப்பூவலம் என்பது ஓர் ஊர். இதில் பாவ நாசம் ஆக்கிய வரலாறு அறியப்படவில்லை. பூவலம் என்பதற்குப் பூலோகம் எனப் பொருள்கொண்டு, இறைவன் இறைவியோடு கூடிப் பூவுலகில் பல இடங்களில் பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு அருள் புரிகின்ற தன்மையைக் குறிப்பிட்ட தாகக் கூறுவாரும் உளர்.

தண்ணீர்ப் பந்தர் சயம்பெற வைத்து
நன்னீர்ச் சேவக னாகிய நன்மையும்;

பதப்பொருள் : தண்ணீர்ப் பந்தர் சயம் பெற வைத்து - தண்ணீர்ப் பந்தலை வெற்றியுண்டாக வைத்து, நல் நீர் சேவகன் ஆகிய நன்மையும் - நல்ல நீரைத் தரு ஆளாகியிருந்த நன்மையும்.

விளக்கம் : தண்ணீர்ப் பந்தர் வைத்தது.

சிவனடியனாய் இருந்த பாண்டிய மன்னன் ஒருவனுக்குத் தீய குணமுடையவனாகிய தம்பி ஒருவன் இருந்தான். அவன் சோழன்