பக்கம் எண் :

திருவாசகம்
52


மகளை மணந்து, அண்ணன்மீது படையெடுத்து வந்தான். பாண்டியன் இறைவனை வணங்கிப் போரிட்டான். தம்பியினுடைய படை, கோடை வெப்பம் தாங்காது மடிந்தது. ஆனால், பாண்டியன் படைக்கு அருகில் இறைவனருளால் ஒரு தண்ணீர்ப் பந்தல் தோன்றியது. அங்குக் கிடைத்த நறுநீரைப் பருகிப் பாண்டியன் படை தாகவிடாய் தீர்ந்து, போரில் வெற்றி கண்டது. (திருவிளையாடற்புராணம் - தண்ணீர்ப்பந்தல் வைத்த படலம்)

60. விருந்தின னாகி வெண்கா டதனிற்
குருந்தின் கீழன் றிருந்த கொள்கையும்;

பதப்பொருள் : விருந்தினன் ஆகி - விருந்தாளியாகி, வெண்காடு அதனில் - திருவெண்காட்டில், குருந்தின்கீழ் - குருந்த மரத்தின் அடியில், அன்று இருந்த கொள்கையும் - அன்று வீற்றிருந்த கோலமும்.

விளக்கம் : திருவெண்காட்டில் இறைவன் அடியவர் இல்லத்தில் உண்ண விருந்தினனாகி வந்து குருந்த மரத்தின்கீழ் வீற்றிருந்தனன் என்னும் ஒரு வரலாறு இப்பகுதியால் அறியப்படுகிறது. ஆயினும், அதன் விரிவு விளங்கவில்லை.

பட்ட மங்கையிற் பாங்கா யிருந்தங்
கட்டமா சித்தி யருளிய அதுவும்;

பதப்பொருள் : பட்டமங்கையில் - திருப்பட்டமங்கை என்னும் திருப்பதியில், பாங்காய் இருந்து - சிறப்பாய் இருந்து, அங்கு - அவ்விடத்தில், அட்டமாசித்தி - அட்டமாசித்திகளை, அருளிய அதுவும் - அருளிய அவ்விதமும்.

விளக்கம் : அட்டமாசித்தி உபதேசித்தது :

திருக்கயிலையில் இறைவன், கார்த்திகைப் பெண்கள் அறுவர்க்கும் அட்டமாசித்திகளை உபதேசம் செய்தான். திருவருள் துணையின்மையால் அவர்கள் அவற்றை மறந்தார்கள். இறைவன் சினந்து அவர்களைப் பட்டமங்கையில் ஆலமரத்தின் கீழ்க் கல்லாய்க் கிடக்குமாறு சபித்தான். அச்சாபத்தை நீக்க இறைவனே ஆசிரியனாய் வந்து அவர்களுக்கு அருள் புரிந்தான்.

(திருவிளையாடற்புராணம் - அட்டமாசித்தி உபதேசித்த படலம்) அட்டமாசித்திகளாவன : அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராத்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பன. பட்டமங்கையென்னும் ஊர் இராமநாதபுரம் மாவட்டத்தில் சிவகங்கைப் பகுதியைச் சார்ந்தது.

வேடுவ னாகி வேண்டுருக் கொண்டு

65. காடது தன்னிற் கரந்த கள்ளமும்;