பதப்பொருள் : வேடுவன் ஆகி - வேடுவனாய் வந்து, வேண்டு உருக்கொண்டு - வேண்டும் வடிவைக்கொண்டு, காடுஅதுதன்னில் - காட்டில், கரந்த கள்ளமும் - ஒளித்த வஞ்சகமும். விளக்கம் : வேடுவனாகி வந்து காட்டில் மறைந்தது : வலிமை மிக்க சோழ மன்னன் ஒருவன் பாண்டிய மன்னன் மீது படையெடுத்து வந்து தாக்கினான். அப்பொழுது இறைவன் பாண்டியனுக் கிரங்கி வேடவுருவம் தாங்கிக் குதிரைமேற்சென்று, சோழனது குதிரைமீது வேற்படையைச் செலுத்தி, அவன் எதிர்த்த பொழுது புறங்கொடுத்து ஓடுவது போலக் காட்டி ஒரு மடுவில் இறங்க, சோழனும் பின் தொடர்ந்து அம்மடுவில் வீழ்ந்து இறந்தான். அவ்வளவில் வேடனாய் வந்த இறைவன் காட்டினில் மறைந்தான் (திருவிளையாடற்புராணம் - சோழனை மடுவில் வீட்டிய படலம்). மெய்க்காட் டுட்டு வேண்டுருக் கொண்டு தக்கான் ஒருவ னாகிய தன்மையும். பதப்பொருள் : மெய்காட்டிட்டு - படைகளின் உண்மையைக் காட்டச் செய்து, வேண்டு உரு கொண்டு - அதற்கு வேண்டிய வடிவம் கொண்டு, தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும் - மேன்மையுடைய ஒருவனாய்த் தோன்றிய தன்மையும். விளக்கம் : மெய்க்காட்டிட்டது : பாண்டிய மன்னன் ஒருவனுக்குச் சவுந்தர சாமந்தான் என்னும் சிவபக்தன் சேனைத்தலைவனாய் இருந்தான். அக்காலத்தில் சேதிராயன் என்பான் வேடர்களுக்குத் தலைவனாய் விளங்கினான். அவன் பாண்டி நாட்டின் மீது படையெடுக்க எண்ணினான். பாண்டிய மன்னன் தன் சேனைத் தலைவனை வருவித்துப் போருக்கு வேண்டிய சேனையைத் திரட்டப் போதிய நிதியை யளித்தான். ஆனால், அந்நிதி முழுவதையும் சேனைத்தலைவன் ஆலயத் திருப்பணிக்கும், அடியார் வழிபாட்டுக்கும் செலவு செய்தான். பாண்டியன் வெகுண்டு, சவுந்தர சாமந்தனை யழைத்து, "நாளைக்குள் நீ தொகுப்பித்த படைகளை மெய்யே காட்டுவாயாக", என்று பணித்தான். அடியார் துயர் தீர்க்கும் பெருமான் மறுநாள் பெரும்படையைத் திரட்டிக்கொண்டு பாண்டியன் முன் வந்தான். சேனைத்தலைவன் படையின் அணி வகுப்பைப் பாண்டியனுக்குக் காட்டி, தனிச்சிறப்போடு பின்னே விளங்கிய ஒற்றைச் சேவகனையும் காட்டினான். அவ்வமயம் வேடர் தலைவன் சேதிராயன் புலியினால் விழுங்கப்பட்டான் என்ற செய்தியும் வந்தது. பாண்டியனும் பெருமகிழ்வு கொண்டான். (திருவிளையாடற்புராணம் - மெய்க்காட்டிட்ட படலம்) ஓரி யூரின் உகந்தினி தருளிப் பாரிரும் பாலக னாகிய பரிசும்,
|