பக்கம் எண் :

திருவாசகம்
54


பதப்பொருள் : ஓரி ஊரின் - ஓரியூரில், இனிது உகந்து அருளி - இனிதாக எழுந்தருளி, பார் இரும்பாலகன் ஆகிய பரிசும் - பூமியில் பிறவாப் பெருமையுடைய குழந்தையாகிய தன்மையும்.

விளக்கம் : தந்தையின் சொல்லுக்கேற்ப ஒரு சைவ மறையோன் மகள், வைணவப் பிரமசாரிக்கு வாழ்க்கைப்பட்டாள். அவளது வாழ்வு பொலிவு பெறவில்லை. ஒரு நாள் தன் வீட்டில் மாமியார் முதலியோர் வெளியூருக்குத் திருமணத்துக்குச் சென்று விட்டார்கள். அவ்வமயம் இறைவன் அவளது பத்தியை வெளிப்படுத்தும்பொருட்டு விருத்தனாய் வந்து பிச்சை கேட்டான்; உணவருந்திய பின்னர்க் குமாரனாய் மாறினான்; மாமியார் முதலியோர் வீட்டுக்குத் திரும்பியபோது குழந்தையாகக் காட்சி கொடுத்தருளினான். (திருவிளையாடற்புராணம் - விருத்த குமார பாலரான படலம்)

ஓரியூர் என்னும் இப்பெயர் திருவிளையாடற்புராணத்துட் காணப்படவில்லை.

70. பாண்டூர் தன்னில் ஈண்ட விருந்தும்:

பதப்பொருள் : பாண்டூர்தன்னில் - பாண்டூரில், ஈண்ட விருந்தும் - மிக இருந்தும்.

தேவூர்த் தென்பாற் றிகழ்தரு தீவிற்
கோவார் கோலங் கொண்ட கொள்கையும்;

பதப்பொருள் : தேவூர்த் தென்பால் - தேவூருக்குத் தென்திசையில், திகழ்தரு தீவில் - விளங்குகின்ற தீவில், கோ ஆர் கோலம் கொண்ட கொள்கையும் - அரசக் கோலம் கொண்ட கோட்பாடும்.

தேனமர் சோலைத் திருவா ரூரில்
ஞானந் தன்னை நல்கிய நன்மையும்;

பதப்பொருள் : தேன் அமர் சோலை - தேன் பொருந்திய மலர்ச்சோலை சூழ்ந்த, திருவாரூரில் ஞானம் தன்னை நல்கிய நன்மையும் - திருவாரூரில் ஞானத்தைக் கொடுத்த நன்மையும்.

விளக்கம் : திருவாரூரின் இயற்கை வனப்பைக் காட்டுவார். "தேனமர் சோலைத் திருவாரூர்" என்றார்.

75. இடைமரு ததனில் ஈண்ட விருந்து
படிமப் பாதம் வைத்தவப் பரிசும்;

பதப்பொருள் : இடைமருது அதனில் - திருவிடைமருதூரில், ஈண்ட இருந்து - மிக இருந்து, படிமப் பாதம் வைத்த அப்பரிசும் - பரிசுத்தமான திருவடியை வைத்த அந்தத் தன்மையும்.

விளக்கம் : பாண்டூர்தன்னில் ஈண்டவிருந்தது முதலிய வரலாறுகள் அறியப்பட்டில.