பக்கம் எண் :

திருவாசகம்
55


ஏகம் பத்தின் இயல்பா யிருந்து
பாகம் பெண்ணோ டாயின பரிசும்;

பதப்பொருள் : ஏகம்பத்தின் இயல்பாயிருந்து - திருவேகம் பத்தில் இயற்கையாய் எழுந்தருளியிருந்து, பெண்ணோடு பாகம் ஆயின பரிசும் - பெண்ணை இடப்பாகத்தில் கொண்ட தன்மையும்.

விளக்கம் : பாகம் பெண்ணோடாயினது :

உமையம்மையார், திருவேகம்பம் என்னும் காஞ்சி மாநகரில் கம்பையாற்றங்கரையில் மணலால் சிவலிங்கம் செய்து இறைவனை வழிபட்டார். அவ்வமயம் ஆறு பெருகி வர, அம்மையார் மனமுருகிச் சிவலிங்கத்தைத் தழுவிக்கொண்டார். இறைவன் அவ்விலிங்கத்தினிடம் தோன்றி அவ்வம்மையாரை அணைத்துத் தன் இடப்பாகத்தில் கொண்டருளினான். உமையம்மையார் வழிபட்ட அந்த இடமே திருவேகம்பம் எனப்படுகின்றது. (காஞ்சிப் புராணம் - தழுவக்குழைந்த படலம்).

திருவாஞ் சியத்தில் சீர்பெற இருந்து

80. மருவார் குழலியோடு மகிழ்ந்த வண்ணமும்;

பதப்பொருள் : திருவாஞ்சியத்தில் சீர் பெற இருந்து - திருவாஞ்சியம் என்னும் தலத்தின் சிறப்புப் பொருந்த எழுந்தருளி, மரு ஆர் குழலியோடு - மணம் நிறைந்த கூந்தலையுடைய உமாதேவியோடு, மகிழ்ந்த வண்ணமும் - மகிழ்ந்திருந்த விதமும்.

விளக்கம் : இவ்வரலாறும் அறியப்படவில்லை.

சேவக னாகித் திண்சிலை ஏந்திப்
பாவகம் பலபல காட்டிய பரிசும்;

பதப்பொருள் : சேவகனாகி - வீரனாகி, திண்சிலை ஏந்தி - வலிய வில்லைத் தாங்கி, பலபல பாவகம் காட்டிய பரிசும் - பலபல வீரச் செயல்களைக் காட்டிய தன்மையும்.

விளக்கம் : ஒரு காலத்தில் சமணர்கள் சோழ மன்னன் ஏவலால் பாண்டியனுக்குத் தீங்கு இழைக்க ஒரு வேள்வி செய்தார்கள். அவ்வேள்வியினின்றும் தோன்றிய யானை பாண்டி நாட்டை அழிக்கத் தொடங்கியது. பாண்டியனுக்கு இரங்கி இறைவன் சேவகனாய் வில்லேந்தி வந்து, அந்த யானையைக் கொன்று, பாண்டியனுக்கு அருள் செய்தான். (திருவிளையாடற் புராணம் - யானையெய்த படலம்).

கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும் :

பதப்பொருள் : கடம்பூர்தன்னில் - திருக்கடம்பூரில், இடம் பெற இருந்தும் - இடமுண்டாக இருந்தும்.