விளக்கம்: திருக்கடம்பூர் என்னும் ஊர் தென்னார்க்காட்டு மாவட்டத்தில் உள்ளது. ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும் : பதப்பொருள் : ஈங்கோய் மலையில் - திருவீங்கோய் மலையில், எழில்அது காட்டியும் - அழகைக் காட்டியும். விளக்கம் : திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள திருவீங்கோய் மலையிலுள்ள மரகதலிங்கம் மிக்க எழிலுடையது; இவ்விரு வரலாறுகளும் விளங்கவில்லை. 85. ஐயா றதனில் சைவ னாகியும்; பதப்பொருள் : ஐயாறு அதனில் - திருவையாற்றில், சைவன் ஆகியும் - சைவனாய் வந்தும், விளக்கம் : திருவையாற்றில் சைவனாகியது : திருவையாற்றில் கோயில் பூசை செய்யும் இருபத்து நான்கு மறையோர்களுள் ஒருவர் காசிக்குச் சென்றுவிட்டார். அவரது பங்கை ஏனையோர் கொண்டனர். ஆனால், அவர் மனைவியும் மைந்தனும், ஐயாற்று அப்பரிடம் முறையிட, அவரும் காசிக்குச் சென்ற மறையோர் போல வந்து அவர்களுக்குரிய பாகத்தைப் பெற்றுக் கொடுத்தார். உண்மையாகக் காசிக்குக் சென்ற மறையோர் வந்த பின்னர் முன்பு மறையோராய் வந்த இறைவர் மறைந்தருளினார். (திருவையாற்றுப் புராணம்) துருத்தி தன்னி லருத்தியோ டிருந்தும்; பதப்பொருள் : துருத்திதன்னில் - திருத்துருத்தி என்னும் திருப்பதியில், அருத்தியோடு இருந்தும் - விருப்பத்தோடி ருந்தும். விளக்கம் : துருத்தி என்னும் தலம் தஞ்சை மாவட்டத்திலுள்ளது. இதனைக் குத்தாலம் என இந்நாளில் வழங்குவர். திருப்பனை யூரில் விருப்ப னாகியும்; பதப்பொருள் : திருப்பனையூரில் - திருப்பனையூர் என்னும் பதியில், விருப்பன் ஆகியும் - விருப்பமுடையவனாய் இருந்தும். விளக்கம் : திருப்பனையூர், தஞ்சை மாவட்டத்தில் நன்னிலத்துக்கு அருகில் உள்ளது. கழுமல மதனிற் காட்சி கொடுத்தும்; பதப்பொருள் : கழுமலம் அதனில் - சீகாழியில், காட்சி கொடுத்தும் - திருவுருவினைக் காட்டியும். கழுக்குன் றதனில் வழுக்கா திருந்தும்; பதப்பொருள் : கழுக்குன்று அதனில் - திருக்கழுக்குன்றத்தில், வழுக்காது இருந்தும் - நீங்காது இருந்தும். விளக்கம் : துருத்தி தன்னில் அருத்தியோடிருந்தது முதலிய நான்கு வரலாறுகளும் விளங்கவில்லை.
|