பக்கம் எண் :

திருவாசகம்
506


32. பிரார்த்தனைப் பத்து
(திருப்பெருந்துறையில் அருளியது)

அந்தமிலா ஆனந்தத்தில் அழுந்தச் செய்ய வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்ளுதல் பிரார்த்தனைப் பத்து. இது அந்தாதித் தொடையில் அமைந்துள்ளது. 'பத்து' என்றாலும் இதில் பதினொரு பாட்டுகள் உள்ளன.

சதாமுத்தி

முத்தியின்பம் நீங்காமை

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

கலந்து நின்னடி யாரோ டன்று வாளா களித்திருந்தேன்
புலர்ந்து போன காலங்கள் புகுந்து நின்ற திடர்பின்னாள்
உலர்ந்து போனேன் உடையானே உலவா இன்பச் சுடர்காண்பான்
அலந்து போனேன் அருள்செய்யாய் ஆர்வங் கூர அடியேற்கே.

பதப்பொருள் : உடையானே - உடையவனே, அன்று - நீ என்னை ஆட்கொண்ட அந்நாளில், நின் அடியாரோடு கலந்து - உன் அடியார்களுடன் கூடியிருத்தலை மாத்திரம் செய்து, வாளா களித்திருந்தேன் - வீணே மகிழ்ந்திருந்தேன்; காலங்கள் புலர்ந்து போன - நாள்கள் கழிந்து போயின; பின்னாள் - பிற்காலத்தில், இடர் புகுந்து நின்றது - அவர்களை விட்டுப் பிரிந்ததும் துன்பம் புகுந்து நிலைபெற்றது; உலர்ந்து போனேன் - அதனால் வாடிப்போனேன்; உலவா இன்பச்சுடர் - கெடாத இன்பத்தைத் தருகிற ஒளி வடிவினனாகிய உன்னை, காண்பான் - காணும்பொருட்டு, அலந்து போனேன் - வருந்தினேன்; அடியேற்கு - அடியேனாகிய எனக்கு, ஆர்வம் கூர - உன்மீது அன்பு மிகும்படி, அருள்செய்யாய் - அருள் செய்வாயாக.

விளக்கம் : அன்பு செலுத்தாது வீணே காலத்தைப் போக்கினேனாதலின், 'வாளா களித்திருந்தேன்' என்றார். 'அதனால் துன்பம் வந்து உற்றது' என்பார், 'உலர்ந்து போனேன்' என்றார். 'அலந்து போனேன்' என்றது, இறைவனைப் பிரிந்த போது உண்டானது. ஆதலின், குறைவிலா அன்பையருளி வாட்டத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதாம்.

இதனால், இறைவன் சுடர் போன்றவன் என்பது கூறப்பட்டது.

1