பக்கம் எண் :

திருவாசகம்
505


தெவிட்டக்கூடியது என்க. சிவஞானத்தினால் வினையும் மலமும் அற்றன என்பதாம். இறைவன் தன்னையடைதற்குரிய நெறியை அன்பை அருளியதோடு மலத்தை அறுத்தலாகிய பயனையும் தமக்குக் கொடுத்தருளினான் என்றார்.

இதனால், இறைவன் ஞானத்தை அருளுபவன் என்பது கூறப்பட்டது.

9

பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப்
பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமிலாப் பெருமையனைக்
கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை
வேதங்கள் தொழுதேத்தும் விளங்குதில்லை கண்டேனே.

பதப்பொருள் : பூதங்கள் ஐந்து ஆகி - ஐம்பூதங்களாகி, புலன் ஆகி - சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற புலன்களாகி, பொருள் ஆகி - ஏனைய எல்லாப் பொருள்களும் ஆகி, பேதங்கள் அனைத்தும் ஆய் - அவற்றிற்கேற்ப வேறுபாடுகளுமாய், பேதம் இலா - தான் வேறுபடுதல் இல்லாத. பெருமையனை - பெருமையுடையவனை, கேதங்கள் கெடுத்து ஆண்ட - துன்பங்களைப் போக்கி எம்மை ஆண்டு அருளின, கிளர் ஒளியை - மிகுந்து விளங்கும் ஒளிப்பொருளானவனை, மரகதத்தை - பச்சை மணி போன்றவனை, வேதங்கள் தொழுது ஏத்தும் - வேதங்கள் வணங்கித் துதிக்கின்ற, விளங்கு தில்லை கண்டேன் - விளங்குகின்ற தில்லையம்பலத்தில் கண்டேன்.

விளக்கம் : பூதங்கள் புலன்கள் என்ற இரண்டையும் கூறினமையால், 'பொருளாகி' என்றது ஏனைய தத்துவதாத்துவிகங்களையாம். 'பேதங்கள் அனைத்துமாய்' என்றது, இறைவன் தடத்த நிலையில் கொள்ளுகின்ற பல வகை வேறுபாடுகளையும், 'பேதமிலாப் பெருமையன்' என்றது, விகாரம் அற்ற அவனது உண்மை நிலையையும் குறிக்கும். 'கிளரொளியை மரகதத்தை' என்றது சிவசத்தி வடிவத்தையாம். அவை சிவப்பும் பச்சையுமாய் நிறங்களைக் குறித்தலால் என்க. இறைவன் அம்மையப்பனாய் உதவுகிறான் என்பதாம்.

இதனால், இறைவன் எல்லாமாய் இருக்கிறான் என்பது கூறப்பட்டது.

10

திருச்சிற்றம்பலம்