பக்கம் எண் :

திருவாசகம்
504


வணங்குகின்ற, தில்லை கண்டேன் - தில்லையம்பலத்தில் கண்டேன்.

விளக்கம் : எண்ணம் பலவாயின், பொருள் விளங்காது. ஆதலின், இறைவன் அதனை ஒருமுகப்படுத்திப் பொருளை விளக்கினான் என்றும், பொருள் விளங்கவே, அதனால் உண்டாகும் ஆனந்தமும் தடையின்றிப் பெருகிற்று என்றும் கூறியபடியாம். 'பொருள்' என்பது மெய்பொருள். 'சித்தமெனுந் திண்கயிற்றால் திருப்பாதங் கட்டுவித்த' என்று முற்பாட்டில் கூறியதையுங் காண்க. எண்ணத்தை ஒருமுகப்படுத்தாது பல வகையாக அலையச் செய்வன, புத்தி தத்துவத்தில் தோன்றும் பாவகங்கள். இப்பாவகங்களைச் சாத்திரங்கள் 'தன்மம், ஞானம், வைராக்கியம், ஐசுவரியம், அதன்மம், அஞ்ஞானம், அவைராக்கியம், அநைசுவரியம் எனப் பெரும்பான்மை எட்டாக வகுத்தும், அவற்றை ஐம்பது, நானூற்றைம்பது, அறுநூற்றுப் பன்னிரண்டு என்று மிகப்பலவாகவும் விரித்தும் கூறும். அவற்றையே இங்கு 'அளவிலாப் பாவகத்தால் அமுக்குண்டு' என்று கூறினார் என்க. பயனற்றுக்கிடந்த தம்மைப் பயனுடையவனாக்கினான் இறைவன் என்பதாம். தேவர்களிலும் அன்புடையவர்களே இறைவனை வணங்குவார்கள் ஆதலின், 'களவிலா வானவரும் தொழும்தில்லை' என்றார்.

இதனால், இறைவனே மெய்ப்பொருளைக் காட்ட வல்லவன் என்பது கூறப்பட்டது.

8

பாங்கினொடு பரிசொன்றும் அறியாத நாயேனை
ஓங்கியுளத் தொளிவளர உலப்பிலா அன்பருளி
வாங்கிவினை மலம்அறுத்து வான்கருணை தந்தானை
நான்குமறை பயில்தில்லை அம்பலத்தே கண்டேன்.

பதப்பொருள் : பாங்கினொடு - இறைவனையுடையக்கூடிய முறையோடு, பரிசு ஒன்றும் அறியாத - அதனால் வரும் பயன் சிறிதும் அறியாத, நாயேனை - நாய் போன்ற என்னை, உளத்து ஒளி ஓங்கி வளர - மனத்தின்கண் ஞான ஒளி மிகுந்த வளர, உலப்பு இலா - முடிவில்லாத, அன்பு அருளி - அன்பினை அருளிச்செய்து, வினை வாங்கி - வினைப்பயன் என்னை அடையாதவாறு நீக்கி மலம் அறுத்து - ஆணவ மலத்தை அடக்கி, வான் கருணை தந்தானை - மேலான கருணையைக் கொடுத்தவனை, நான்கு மறை - நான்கு வேதங்களும், பயில் - முழங்குகின்ற, தில்லை அம்பலத்தே கண்டேன் - தில்லையம்பலத்தில் கண்டேன்.

விளக்கம் : உள்ளத்தொளியாவது, சிவஞானம். உலப்பிலா அன்பு இறைவனையடைதலால் உண்டாவது. ஏனைய அன்பு