பக்கம் எண் :

திருவாசகம்
517


உழலப் பண்ணுவித்திட்டாய்' என்றார். இனி இவ்வறியாமையைப் போக்கி அறிவைக் கொடுத்து உன் பெருமையைப் பாடச் செய்ய வேண்டியவனும் நீயே என்று வேண்டியபடி.

இதனால், இறைவனது மறைப்புச் சத்தியின் தன்மை கூறப்பட்டது.

4

கூறும் நாவே முதலாகக் கூறுங் கரணம் எல்லாம்நீ
தேறும் வகைநீ திகைப்பும்நீ தீமை நன்மை முழுதும்நீ
வேறோர் பரிசிங் கொன்றில்லை மெய்ம்மை உன்னை விரித்துரைக்கில்
தேறும் வகைஎன் சிவலோகா திகைத்தால் தேற்ற வேண்டாவோ.

பதப்பொருள் : சிவலோகா - சிவலோக நாதனே, கூறும் நாவே முதலாக - பேசுகின்ற நாக்கு முதலாக, கூறும் கரணம் எல்லாம் நீ - சொல்லப்படுகின்ற கருவிகள் எல்லாம் நீயே, தேறும் வகை நீ - தெளிவடையும் வழியும் நீயே; தீகைப்பும் நீ - தெளியாமல் திகைத்தலைச் செய்பவனும் நீயே; தீமை நன்மை முழுதும் நீ - தீமை நன்மைகள் முழுவதும் நீயே; மெய்ம்மை - உண்மையாக, உன்னை விரித்து உரைக்கின் - உன்னைப்பற்றிச் சொன்னால், இங்கு - இவ்விடத்தில், வேறு ஒர் பரிசு இல்லை - வேறு ஒரு பொருள் சிறிதும் இல்லை; ஆதலால், தேறும் வகை என் - நான் தெளிவை அடையும் வழி உன்னையன்றி ஏது? இல்லை; ஆகையால், திகைத்தால் - யான் திகைப்படைந்தால், தேற்ற வேண்டாவோ - என்னை நீ தெளிவிக்க வேண்டாவோ?

விளக்கம் : 'கரணம்' என்றது இங்கு அகக்கருவி, புறக்கருவி இரண்டையும் குறித்தது. 'பேசுகின்ற நாவாகவும் நினைக்கின்ற மனமாகவும் இருக்கிறான் இறைவன்' என்பார், 'கூறும் நாவே முதலாகக் கூறுங்கரணம் எல்லாம் நீ என்றார். இனி, நினைக்கின்ற மனத்துக்குத் தெளிவையும் திகைப்பையும் தருபவனாய் இருக்கிறான் என்பதோடு, அதனால் விளையும் பயனாகிய நன்மை தீமையாயும் இருக்கிறான் என்றும் அடுத்துக் கூறினார். ஆதலின், திகைத்த காலத்தில் தெளிவை உண்டு பண்ணி ஆறுதல் அளிப்பவர் வேறு யாவர்? ஒருவரும் இல்லை; ஆதலின், நீயே அதனைச் செய்தல் வேண்டும் என்று வேண்டியபடி.

இதனால் தெளிவை உண்டாக்குபவன் இறைவன் என்பது கூறப்பட்டது.

5

வேண்டத் தக்க தறிவோய்நீ வேண்ட முழுதும் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய் யானும் அதுவே வேண்டினல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே.