பக்கம் எண் :

திருவாசகம்
519


என்னுடைய உயிரையும், உடலும் - உடம்பையும், உடைமை எல்லாமும் - பொருள் எல்லாவற்றையும், கொண்டிலையோ - உன்னுடையனவாக ஏற்றுக்கொள்ளவில்லையோ? அங்ஙனமாக, இன்று - இப்பொழுது, ஓர் இடையூறு - ஒரு துன்பம், எனக்கு உண்டோ - எனக்கு உண்டாகுமோ? உண்டாகாது; ஆதலின், நன்றே செய்வாய் - எனக்கு நீ நன்மையே செய்வாய் எனினும், பிழை செய்வாய் - தீமை செய்வாய் எனினும், இதற்கு - இத்தன்மைக்கு, நாயகம் - தலைவன், நானோ? யானோ? (இல்லை என்றபடி.)

விளக்கம் : உயிர் உடம்பு உடைமை என்றதால், எல்லாம் இறைவனது உடைமை என்பதாம். ஆதலின், தமக்கென ஒரு செயல் இன்றாதலின், அதனால் உண்டாகும் பயனும் தமக்கு இல்லை என்பார், 'இன்றோர் இடையூ றெனக்குண்டோ?' என்றார். இறைவனே எல்லாவற்றுக்கும் தலைவன் என்று கூறியபடி.

இதனால், அடியார்களது தொண்டின் திறம் கூறப்பட்டது.

7

நாயிற் கடையாம் நாயேனை நயந்து நீயே ஆட்கொண்டாய்
மாயப் பிறவி உன்வசமே வைத்திட் டிருக்கும் அதுவன்றி
ஆயக் கடவேன் நானோதான் என்ன தோஇங் கதிகாரங்
காயத் திடுவாய் உன்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே.

பதப்பொருள் : கண்ணுதலே - நெற்றிக்கண்ணையுடைய பெருமானே, நாயின் கடை ஆம் - நாயினும் கீழான, நாயேனை - நாய் போன்றவனை, நயந்து - விரும்பி, நீயே ஆட்கொண்டாய் - நீயே அடிமை கொண்டாய், மாயப்பிறவி - மாயா காரியமான இப்பிறப்பை, உன் வசமே வைத்திட்டிருக்கும் அது அன்றி - உன்னிடம் ஒப்புவித்து உன் ஆணைவழி நடப்பதன்றி, ஆயக் கடவேன் - ஆராயும் தன்மை உடையேன், நானோதான் - நானோ? இங்கு அதிகாரம் என்னதோ - இவ்விடத்தில் அதிகாரம் என்னுடையதோ? இல்லை; ஆதலால், காயத்து இடுவாய் - என்னை நீ இந்த உடம்பில் வைப்பினும் வைப்பாய், உன்னுடைய கழல்கீழ் வைப்பாய் - உன்னுடைய திருவடி நிழலில் சேர்ப்பினும் சேர்ப்பாய்; அஃது உன் விருப்பம்.

விளக்கம் : 'நாயிற் கடையாம் நாயேனை' என்றது, மிகக் கீழான தன்மையுடையேன் என்றபடி. 'இப்பிறவியில் வைத்தது ஏன்? இதனின்றும் ஏன் நீக்கவில்லை? என்று ஆராய்வதற்கு எனக்கு உரிமை இல்லை என்பார், 'ஆயக்கடவேன் நானோதான் என்னதோ இங்கதிகாரம்' என்றார். இறைவன்பால் பொறுப்பினை ஒப்புவித்து, அவன் அருள்வண்ணம் நடப்பதே உயிர்களின் கடமை என்பதாம்.

இதனால், இறைவன் சுதந்தரத்தன்மை கூறப்பட்டது.

8