எழுந்தருளியிருக்கும், பனவன் - அந்தணனும், பரஞ்சுடர் - மேலான சுடரானவனுமாகிய இறைவன், எனை - அடியேனை, மத்தோன்மத்தன் ஆக்கி - பெரும்பித்தனாக்கி, எனைச் செய்த படிறு அறியேன் - எனக்குச் செய்த வஞ்சனையை அறியேன்; எனை நான் என்பது அறியேன் - என்னை நான் என்று உணர்வது அறியேன்; பகல் இரவு ஆவது அறியேன் - பகல் இரவு செல்வதையும் அறியேன். விளக்கம் : தம் நினைவின்றி இருத்தலையே 'எனைநானென்ப தறியேன்' என்றார். இடைவிடாது இறை ஒளியில் பேரின்பம் துய்த் திருத்தலால் இரவு பகல் உணரப்படாமை அறிக. இதனையே, 'இராப்பக லற்ற இடத்தே இருந்து பராக்கற ஆனந்தத் தேறல் பருகி' என்றார் திருமூலர். உயிருண்ணப்பட்டமையால், இந்நிலை எய்திற்று என்க. இறைவன் ஆன்ம அறிவைக் கெடுத்து அருளுகின்றான் என்பதாம். இதனால், இறைவன் வாக்கு மனத்துக்கு அப்பாற்பட்டவன் என்பது கூறப்பட்டது. 3 வினைக்கேடரும் உளரோபிறர் செல்லீர்விய னுலகில் எனைத்தான்புகுந் தாண்டான்என தென்பின்புரை உருக்கிப் பினைத்தான்புகுந் தெல்லேபெருந் துறையில்உறை பெம்மான் மனத்தான்கண்ணின் அகத்தான்மறு மாற்றத்திடை யானே. பதப்பொருள் : எல்லே பெருந்துறையில் உறை பெம்மான் - பகலில் திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற பெருமான், எனை - அடியேனை, தான் - தானே, புகுந்து - எழுந்தருளி, ஆண்டான் - ஆண்டுகொண்டான்; எனது என்பின் புரை உருக்கி - என்னுடைய என்பினது உள்துளைகளையும் உருகச்செய்து, பினை புகுந்து - மேலும் வந்து, மனத்தான் - என் மனத்தினுள்ளானாயினான்; கண்ணின் அகத்தான் - கண்ணிலும் உள்ளானாயினான்; மறு மாற்றத்திடையான் - மற்றும் வாக்கினும் உள்ளானாயினான்; வியன் உலகில் - பரந்த உலகத்தில், வினைக்கேடரும் - இவனைப் போல வினையைக் கெடுப்பவரும், பிறர் உளரோ - பிறர் இருக்கின் றார்களோ? சொல்லீர் - சொல்லுங்கள். விளக்கம் : இறைவன் என்பினை உருக்கி எளிமையாக ஆட்கொண்டதுமன்றி, மனத்திலும் கண்ணிலும் வாக்கிலும் கலந்து இருக்கிறான் என்பதாம். மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான்' என்ற திருநாவுக்கரசர் வாக்கையும் காண்க, இறைவன் நேரே குருவாகி வந்து உடல் பொருள் ஆவி அனைத்தையும் கைக்கொண்டு ஆண்டமையின் 'வினைக்கேடரும் உளரோ பிறர்'
|