பக்கம் எண் :

திருவாசகம்
532


என் பொலாமணியை ஏத்தி - எனது துளையிடப்படாத மாணிக்கத்தைத் துதித்து, அருள் இனிது பருகமாட்டா - அவனது திருவருளை நன்கு நுகர மாட்டாத, அன்பு இலாதவரைக் கண்டால் - அன்பற்றவரைக் காணின், அம்ம - ஐயோ, நாம் அஞ்சும் ஆறு - நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

விளக்கம் : 'காலனைக் கடிந்து காமனை எரித்த பெருமானது அடியார்க்குக் கொடிய வேலும் மாதரது கூரிய பார்வையும் துன்பம் தரமாட்டா' என்பார், 'வன்புலால் வேலும் அஞ்சேன், வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்' என்றார். 'ஆனால், அம்பலத்தாடும் பெருமானது இனிமையான பார்வையையும் அழகிய நடனத்தையும் கண்டு அன்புறாதவர்களைக் கண்டால் அஞ்ச வேண்டும்' என்பார், 'அம்பலத்தாடுகின்ற என் பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா அன்பிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறு' என்றார்.

இதனால், இறைவனது அருள் நடனத்தைக் கண்டு இன்புறுவதே மனிதப்பிறவியின் பயன் என்பது கூறப்பட்டது.

3

கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன்
வெளியநீ றாடும் மேனி வேதியின் பாதம் நண்ணித்
துளியுலாம் கண்ண ராகித் தொழுதழு துள்ளம் நெக்கிங்
களியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

பதப்பொருள் : கிளி அனார் - மொழியால் கிளி போன்ற மாதரது, கிளவி அஞ்சேன் - இனிய சொற்களுக்கு அஞ்ச மாட்டேன்; அவர் - அவரது, கிறி முறுவல் அஞ்சேன் - வஞ்சனையுடைய புன்சிரிப்புக்கும் அஞ்ச மாட்டேன்; வெளிய நீறு ஆடும் - வெண்மையான திருநீற்றல் மூழ்கிய, மேனி - திரு மேனியையுடைய, வேதியின் பாதம் நண்ணி - அந்தணனது திருவடியை அடைந்து, துளி உலாம் கண்ணர் ஆகி - நீர்த்துளிகள் சிந்துகின்ற கண்களையுடையவராய், தொழுது அழுது - வணங்கி அழுது, உள்ளம் நெக்கு - உள்ளம் நெகிழ்ந்து, இங்கு - இவ்விடத்தில், அளி இலாதவரைக் கண்டால் - கனிதல் இல்லாதவரைக் காணின், அம்ம - ஐயோ, நாம் அஞ்சும் ஆறு - நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

விளக்கம் : ஒரு வார்த்தையால் ஆட்கொள்ளும் சொல்லையும் குமிழ் சிரிப்பையும் உடையவனாகிய பெருமானைக் காணப் பெற்றவர், மாதரது அழகிய சொல்லுக்கும் வஞ்சனைச் சிரிப்புக்கும் அஞ்ச வேண்டுவது இல்லை. ஆனால், பெருமானது அருட் கோலத்தைக் கண்டு உருகாதவர்களைக் கண்டால் அஞ்ச வேண்டும் என்கின்றார். அருட்கோலமே கண்ணுக்கும் செவிக்கும் இன்பம் தருமாதலின், அதனைப் பருகி உள்ளம் உருக வேண்டும் என்பதாம்.