36, திருப்பாண்டிப் பதிகம் (திருப்பெருந்துறையில் அருளியது) இறைவனைப் பாண்டி நாட்டுத் தலைவனாக வைத்துப் பாடி அருளுதலின் திருப்பாண்டிப்பதிகம் எனப்பட்டது. இதனுள் இறைவன் குதிரை மேல் வந்து அருள் செய்தமை கூறப்படுகின்றது. சிவானந்த விளைவு அஃதாவது, சுகப்பேறு. இப்பேறு இறைவன் திருவிளையாட்டை எண்ணி மகிழ்வதால் உண்டாவதாம். கட்டளைக்கலித்துறை திருச்சிற்றம்பலம் பருவரை மங்கைதன் பங்கரைப் பாண்டியற் காரமுதாம் ஒருவரை ஒன்று மிலாத வரைக்கழற் போதிறைஞ்சித் தெரிவர நின்றுருக் கிப்பரி மேற்கொண்ட சேவகனார் ஒருவரை யன்றி உருவறி யாதென்றன் உள்ளமதே. பதப்பொருள் : பரு - பருமையான, வரை - மலையரசனது, மங்கை - பெண்ணாகிய உமையம்மையின், பங்கரை - பாகரும், பாண்டியற்கு - பாண்டிய மன்னனுக்கு, ஆர் அமுது ஆம் ஒருவரை - அருமையான அமுதமாகிய ஒருவரும், ஒன்றும் இலாதவரை - பற்று ஒன்றும் இல்லாதவரும், கழல் போது இறைஞ்சி - தமது திருவடித் தாமரை மலரை வணங்கி, தெளிவர நின்று - கண்டு மகிழும்படி வெளிப்பட்டு நின்று, உருக்கி - மனத்தை உருக்கி, பரிமேல் கொண்ட சேவகனார் - குதிரையின் மேல் வந்த வீரருமாகிய சிவபெருமான், ஒருவரை அன்றி - ஒருவரையல்லாமல், என்தன் உள்ளம் - என் மனமானது, உரு அறியாது - பிற தெய்வங்களின் வடிவத்தை அறியாது. விளக்கம் : 'இறைஞ்சித் தெரிவர' என்றது, வணங்குவதற்கேற்ப வெளிப்பட்டு நின்று என்றபடி. குதிரைச் சேவகனாய் வந்து தமக்கு உதவினமையை நினைந்து உருகிக் கூறுவார், 'பரிமேற்கொண்ட சேவகனார் ஒருவரையன்றி உருவறியாதென்றன் உள்ளமதே' என்றார். இதனால், இறைவனது உருவத்தை இடைவிடாது நினைத்தல் வேண்டும் என்பது கூறப்பட்டது. 1
|