பக்கம் எண் :

திருவாசகம்
539


சதுரை மறந்தறி மால்கொள்வர்
சார்ந்தவர் சாற்றிச்சொன்னோம்
கதிரை மறைத்தன்ன சோதி
கழுக்கடை கைப்பிடித்துக்
குதிரையின் மேல்வந்து கூடிடு
மேற்குடி கேடுகண்டீர்
மதுரையர் மன்னன் மறுபிறப்
போட மறித்திடுமே.

பதப்பொருள் : கதிரை மறைத்தன்ன சோதி - சூரியனையும் மறைக்கத்தக்க பேரொளி வடிவினனாகிய இறைவன், கழுக்கடை கைப்பிடித்து - சூலத்தைக் கையில் ஏந்தி, குதிரையின்மேல் வந்து கூடிடுமேல் - குதிரையின்மேல் வந்து சேர்வானாயின், சார்ந்தவர் - அதனைக் காணச் சென்றவர், சதுரை மறந்து - தம் பெருமையை மறந்து, அறிமால் கொள்வர் - ஞானப்பித்தை அடைவார்; ஏனெனில், மதுரையர் மன்னன் - மதுரையில் உள்ளவர்க்கு அரசனாகிய பாண்டியனது, மறுபிறப்பு ஓட - மறு பிறப்பு நீங்கும்படி, மறித்திடும் - இவ்வாறு வந்துதான் தடுத்தாட்கொண்டான்; ஆகவே, குடிகேடு - அவன் குதிரைமேல் வருகின்ற காட்சியைச் சென்று காண்பது நம் குடிகெடுவதற்கு ஏதுவாகும், சாற்றிச் சொன்னோம் - பறையறைந்தாற்போலக் கூறினோம்; அறிந்துகொள்ளுங்கள்.

விளக்கம் : கண்டீர் - முன்னிலை அசை. 'இறைவனது பவனியைச் சேவித்த பெண்கள் காதல் வயப்பட்டுத் தம்மை மறந்து இருப்பார்கள். ஆதலின், அவர்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்,' என்று தாயர் முதலியோர்க்கு அறிவிக்கின்ற அகப்பொருள் வகையில் இறைவனது பெருமையை எடுத்துக் கூறினார். இதன் உண்மைப் பொருள் ஊன்றி உணரத்தக்கது. சதுரை மறத்தலாவது, ஆன்ம அறிவு கெடுதல். அறிமால் கொள்ளுதலாவது, பதி அறிவு மிகுதல். சார்ந்தாரது பிறவியைப் போக்கப் படைகொண்டு வந்தான் என்பார், 'கழுக்கடை கைப் பிடித்துக் குதிரையின்மேல் வந்து' என்றார். குடிகேடு என்றது, பாசக் கூட்டம் அழிதலை. இறைவன், அடிகள் வாயிலாகப் பாண்டியனுக்கு மீண்டு வாரா வழியருள் புரிந்தான் ஆதலின், 'மறுபிறப்போட மறித்திடுமே' என்றார். பாண்டியனுக்கு முத்தியளித்தது, அடிகள் அவனுக்குக் குதிரை வாங்கக் கொண்டு சென்ற பொன்னைத் தனக்கும் தன் அடியார்களுக்குமாகச் செய்து அருள் புரிந்த செயலாகும்.

இதனால், மறு பிறப்பை அறுத்து ஆட்கொள்பவன் இறைவனே என்பது கூறப்பட்டது.

2