நீரின்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற நெஞ்சங்கொண்டீர் பாரின்ப வெள்ளங் கொளப்பரி மேற்கொண்ட பாண்டியனார் ஓரின்ப வெள்ளத் துருக்கொண்டு தொண்டரை உள்ளங்கொண்டார் பேரின்ப வெள்ளத்துட் பெய்கழ லேசென்று பேணுமினே. பதப்பொருள் : நீர் இன்ப வெள்ளத்துள் - நீர் எழுத்துப் போன்று அழிந்து போகிற இன்ப வெள்ளத்துள், நீந்திக் குளிக்கின்ற - நீந்தித் திளைக்கின்ற, நெஞ்சம் கொண்டீர் - மனத்தையுடையீர், பார் இன்ப வெள்ளம் கொள - உலகோர் இன்பவெள்ளத்தில் மூழ்கும்படி, பரிமேற் கொண்ட பாண்டியனார் - குதிரையின்மேல் ஏறி வந்த பாண்டிய மன்னராகிய சிவபெருமான், ஓர் - ஒப்பற்ற, இன்ப வெள்ளத்து உருக் கொண்டு - இன்ப வெள்ளமாய்த் தோன்றி, தொண்டரை - அடியாரது, உளளம் கொண்டார் - மனத்தைக் கவர்ந்தார்; பேரின்ப வெள்ளத்துள் சென்று - அப்பேரின்பப் பெருக்கினுள் சென்றடைந்து, பெய்கழலே பேணுமின் - அவரது வீரக்கழலணிந்த திருவடியையே வழிபடுவீராக. விளக்கம் : நீர்மேல் எழுதிய எழுத்துப் போன்று உலக இன்பமானது தோன்றியவுடனே அழியுமாதலின், அதனை, 'நீரின்ப வெள்ளம்' என்றார். 'ஒரின்ப வெள்ளம்' என்றது வைகைப் பெருக்கினையாம். அங்கு மண் சுமக்கும் கூலியாளய் உருவம் கொண்டு அனைவரையும் வியக்கச் செய்ததை, 'உருக்கொண்டு தொண்டரை உள்ளங்கொண்டார்' என்றார். இது அடிகளின் வரலாற்றை ஒட்டியது என்க. இதனால், நிலையில்லா உலக இன்பத்தில் திளைக்காது, நிலையான பேரின்பத்தில் திளைக்க வேண்டும் என்பது கூறப்பட்டது. 3 செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன்மின் தென்னன் நன்னாட் டிறைவன் கிளர்கின்ற காலம்இக் காலம்எக் காலத்துள்ளும் அறிவொண் கதிர்வாள் உறைகழித் தானந்த மாக்கடவி எறியும் பிறப்பை எதிர்ந்தார் புரள இருநிலத்தே. பதப்பொருள் : நல்லவர் - நல்லவராயுள்ளவர், செறியும் பிறவிக்கு - அடர்ந்து வருகின்ற பிறப்புக்கு, செல்லன்மின் -
|