37. பிடித்த பத்து (திருத்தோணி புரத்தில் அருளியது) அடிகள், இறைவனைத் தாம் விடாது பிடித்த செயலைக் கூறும் பத்துப் பாடல்களாதலின், இது 'பிடித்த பத்து' எனப்பட்டது. முத்திக்கலப்புரைத்தல் முத்தியில் கலந்த அனுபவத்தைக் கூறுதல். எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் உம்பர்கட் கரசே ஒழிவற நிறைந்த யோகமே ஊத்தையேன் தனக்கு வம்பெனப் பழுத்தென் குடிமுழு தாண்டு வாழ்வற வாழ்வித்த மருந்தே செம்பொருட் டுணிவே சீருடைக் கழலே செல்வமே சிவபெரு மானே எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. பதப்பொருள் : உம்பர்கட்கு அரசே - தேவர்களுக்கு அரசனே, ஒழிவு அற நிறைந்த யோகமே - எல்லாப் பொருள்களிலும் நீக்கமறக் கலந்திருப்பவனே, ஊத்தையேன் தனக்கு - அழுக்கு உடம்பை உடையேனாகிய எனக்கு, வம்பு எனப் பழுத்து - புதிய பொருள் போலத் தோன்றி, என் குடி முழுது ஆண்டு - என் குடி முழுவதும் ஆண்டருளி, வாழ்வு அற - உலக வாழ்வு நீங்க, வாழ்வித்த - சிவப்பேறு உண்டாகும்படி வாழ்வித்த, மருந்தே - அமுதமே, செம்பொருள் துணிவே - துணியப்பட்ட செம்பொருளே, சீர் உடைக் கழலே - சிறப்பையுடைய திருவடியை உடையவனே, செல்வமே - அருட்செல்வமாயிருப்பவனே, சிவபெருமானே - சிவபிரானே, எம்பொருட்டு - எங்கள் பொருட்டாக, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - உன்னை உறுதியாகப் பற்றினேன்: இனி எங்கு எழுந்தருளுவது - நீ இனிமேல் என்னை விட்டு எங்கே எழுந்தருளிச் செல்வது? விளக்கம் : சூரியனது கிரணம் போல, இறைவனது திருவருள் எங்கும் நீக்கமற நிறைந்து விளங்கியிருத்தலின், 'ஒழிவற நிறைந்த யோகமே' என்றார். 'ஊற்றையேன்' என்பது பாடம் அன்று. இறை உண்மை உணர்ந்த பின்னர்ப் புதிய இன்பம் பிறத்தலின்,
|