சிவபிரானே, எய்ப்பு இடத்து - இளைத்த இடத்தில், உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - உன்னை உறுதியாகப் பற்றினேன், இனி எங்கு எழுந்தருளுவது - நீ இனிமேல் எங்கு எழுந்தருளிச் செல்வது? விளக்கம் : இறைவன் தனக்குவமையில்லாதவனாதலின், 'ஒப்புனக்கில்லா ஒருவனே' என்றார். மெய்ப்பதமாவது, பேரின்ப நிலை. சிறப்பொன்றும் இல்லாத தமக்குச் சிறப்பினை நல்கிய இறைவனது கருணையை, 'அன்பே' என அழைத்தார். எய்ப்பிடமாவது, தமக்கு ஒரு பற்றுக்கோடு இன்றி இளைத்த இடம். இதனால், இறைவன் சிறப்பென்னும் முத்திச் செல்வத்தை அருள வல்லவன் என்பது கூறப்பட்டது. 5 அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண் டளவிலா ஆனந்தம் அருளிப் பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட பிஞ்ஞகா பெரியஎம் பொருளே திறவிலே கண்ட காட்சியே அடியேன் செல்வமே சிவபெரு மானே இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. பதப்பொருள் : அறவையேன் மனமே - ஆதரவு அற்றவனாகிய என்னுடைய மனத்தையே, கோயிலாக் கொண்டு - கோயிலாகக் கொண்டு, ஆண்டு - ஆட்கொண்டு, அளவு இலா ஆனந்தம் அருளி - எல்லையற்ற இன்பத்தை அளித்து, பிறவி வேர் அறுத்து - என்னுடைய பிறப்பின் வேரைக் களைந்து, என் குடி முழுது ஆண்ட - என் குடும்பம் முழுவதையும் ஆட்கொண்ட, பிஞ்ஞகா - தலைக்கோலமுடையவனே, பெரிய எம் பொருளே - பெருமையான எமது மெய்ப்பொருளே, திறவிலே கண்ட காட்சியே - திறந்த வெளியிலே காணப்பட்ட காட்சிப் பொருளே, அடியேன் செல்வமே - அடியேனது அருட்செல்வமே, சிவபெருமானே - சிவபிரானே, இறவிலே - இறுதியிலே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - உன்னை உறுதியாகப் பற்றினேன்; இனி எங்கு எழுந்தருளுவது - நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது? விளக்கம் : திக்கற்றவர்க்குத் தெய்வமே துணையாதலால், 'அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்டு' என்றார். திறவிலே கண்ட காட்சியாவது, திருப்பெருந்துறையிலே யாம் 'யான் இறுதி வந்த காலத்தில் உன்னையன்றிப் பிறிதோர் துணையில்லையென்று பற்றினேன்' என்பார், 'இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்' என்றார். இதனால். இறைவனே பிறவியைப் போக்கி அருள வல்லவன் என்பது கூறப்பட்டது. 6
|