பொருந்திய தில்லை ஆண்டவனை, கொண்டு அன்றே - அடியேன் பற்றிக்கொண்டேன் அல்லவா? விளக்கம் : ஏனம் கீழ் நோக்கிச் செல்லுவது; ஆனால், வலிமையுடையது. அது போல, இந்திரியம் கீழ் நோக்கிச் செல்வது; வலிமையுடையது. பன்றியின் பின் சென்று அதன் ஆற்றலை அடக்கியது போல, இந்திரியத்தின் பின் சென்று அதன் ஆற்றலையும் அடக்கினான் இறைவன் என்றபடி. இஃது இறைவன் உடன் இருந்து உதவும் கருணையாம் என்க. ஏனத்தின் பின் கானகத்தே சென்றது. அருச்சுனன் கயிலை மலைச்சாரலில் பாசுபதாஸ்திரம் பெறும் பொருட்டுக் கடுந்தவம் புரிந்துகொண்டிருந்தான். அவனை அழிக்கக் கருதி, 'மூகன்' என்னும் அசுரன் ஒரு காட்டுப்பன்றி வடிவம் கொண்டு செல்ல, இறைவன் தேவியோடும் எழுந்தருளி வந்து, அப்பன்றியைக் கொன்று, அருச்சுனற்குப் பாசுபதம் கொடுத்தருளினான் என்பது பாரதத்துட் சொல்லப்பட்டது. இதனால், இறைவன் திருவடி சூட்டியபின் ஐம்புல அவா அடங்கும் என்பது கூறப்பட்டது. 8 பாழ்ச்செய் விளாவிப் பயனிலியாய்க் கிடப்பேற்குக் கீழ்க்செய் தவத்தாற் கிழியீடு நேர்பட்டுத் தாட்செய்ய தாமரைச் சைவனுக்கென் புன்தலையால் ஆட்செய் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. பதப்பொருள் : பாழ்ச்செய் - விளையாத வயலை, விளாவி - உழுது விளாச் செய்து, பயனிலியாய்க் கிடப்பேற்கு - பயன் பெறாமல் இருக்கின்ற எனக்கு, கீழிச்செய் தவத்தால் - முற்பிறப்பில் செய்த தவத்தினால், கிழியீடு நேர்பட்டு - புதையல் அகப்பட்டது போன்ற அருள் கிடைக்கப்பெற்று, தாள் செய்ய தாமரை - திருவடியாகிய சிவந்த தாமரை மலரையுடைய, சைவனுக்கு - சைவனுக்கு, என் புன் தலையால் - எனது இழிவான தலையினால் ஆட்செய் - அடிமை செய்து, குலாத்தில்லை ஆண்டானை - விளக்கம் பொருந்திய தில்லை ஆண்டவனை, கொண்டு அன்றே - அடியேன் பற்றிக்கொண்டேன் அல்லவா? விளக்கம் : பாழ் நிலத்தை உழுபவனுக்கும் புதையல் அகப்பட்டது போன்று, மலர்ச்சியற்ற வாழ்விலே சுழல்கின்ற எனக்கு உன் அருளாகிய புதையல் கிடைத்தது என்பதாம். பாழ் நிலத்தை உழுது வருந்தியிருந்த அவன் தனக்குக் கிடைத்த அப்புதையற்பொருளை எவ்வாறு போற்றுவானோ அதைப் போல, வாடி வருந்தியிருந்த எனக்குக் கிடைத்த உனது திருவருளை நான் போற்றி வாழ்கின்றேன் என்றபடி, 'ஆட்செய்' என்பதில் உள்ள 'செய்' என்னும் பகுதி, 'செய்து' என வினையெச்சப் பொருள் தந்தது.
|