பதப்பொருள் : பொச்சை ஆன - காட்டை ஒத்த, இப்பிறவியில் கிடந்து - இப்பிறவியில் பொருந்தி, நான் - யான், புழுத்தலை நாய்போல - புழுப்பொருந்திய தலையினையுடைய நாயைப் போன்று, ஏழையர்க்கே - பெண்களுக்கே, இச்சையாயின செய்து - அவர்கள் விரும்பிய பணிகளைச் செய்து, அங்கு - அவர்களோடு, இணங்கியே திரிவேனை - சேர்ந்து அலைகின்ற எனக்கு, அச்சன் - யாவர்க்கும் தந்தையாகிய சிவபெருமான், அரி அயனும் எட்டாத - திருமாலும் பிரமனும் காண மாட்டாத, தன் விரைமலர்க் கழல் - தனது மணம் பொருந்திய தாமரை மலர் போலும் திருவடிகளை, இச்சகத்துக் காட்டி - இவ்வுலகத்தில் வந்து காட்டியருளி, என்னையும் ஆண்டுகொண்டருளிய, அற்புதம் அறியேன் - அதிசயச் செயலின் பெருமையை யான் அறிய வல்லேனல்லேன். விளக்கம் : காட்டில் புகுந்தவன் வெளி வருவது மிகவும் அரிது. அது போலப் பிறவியில் புகுந்தவனும் வெளி வருவது அரிது. அதனால் பிறவியைக் காடு என்றார். இனி, 'காட்டில் வழி அறியாது அலைகின்றவனை வழி தெரிந்தவன் வெளியே கொண்டுவந்து சேர்ப்பது போல, இறைவனாகிய வழிகாட்டியும் பிறவியாகிய காட்டினின்றும் வெளியே கொண்டுவந்து எனக்கு அருளிய அற்புதம் என்னே!' என்கிறார். இதனால், இறைவன் பிறவியாகிய காட்டை அழித்து அருள வல்லவன் என்பது கூறப்பட்டது. 9 செறியும் இப்பிறப் பிறப்பிவை நினையாது செறிகுழ லார்செய்யுங் கிறியுங் கீழ்மையுங் கெண்டையங் கண்களும் உன்னியே கிடப்பேனை இறைவன் எம்பிரான் எல்லையில் லாததன் இணைமலர்க் கழல்காட்டி அறிவு தந்தெனை ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. பதப்பொருள் : செறியும் - நெருங்கி மேன்மேல் வரும், இப்பிறப்பு இறப்பு இவை நினையாது - இப்பிறப்பு இறப்புகளாகிய இவற்றை நீக்கும் வழியை எண்ணாமல், செறிகுழலார் - அடர்ந்த கூந்தலையுடையவராகிய பெண்கள், செய்யும் - செய்கின்ற, கிறியும் - பொய் நடையையும், கீழ்மையும் - தாழ்மையான தன்மையையும், கெண்டையங்கண்களும் - கயல் மீன் போன்ற கண்களையும், உன்னியே கிடப்பேனை - நினைத்தே கிடக்கின்றவனாகிய, எனை - என்னை, இறைவன் எம்பிரான் - யாவர்க்கும் தலைவனாகிய எம்
|