பக்கம் எண் :

திருவாசகம்
584


நங்கை மீரெனை நோக்குமின்நங்கள்
நாதன் நம்பணி கொண்டவன்
தெங்கு சோலைகள் சூழ்பெருந்துறை
மேய சேவகன் நாயகன்
மங்கை மார்கையில் வளையுங்கொண்டெம்
உயிரும் கொண்டெம் பணிகொள்வான்
பொங்கு மாலர்ச் சேவடிக்கண்நம்
சென்னி மன்னிப் பொலியுமே.

பதப்பொருள் : நங்கைமீர் - பெண்களே, எனை நோக்குமின் - என்னைப் பாருங்கள்; நாங்கள் நாதன் - நம் எல்லோருக்கும் தலைவனும, நம் பணி கொண்டவன் - நம்முடைய தொண்டை ஏற்றுக்கொண்டவனும், தெங்கு சோலைகள் சூழ் - தென்னஞ்சோலைகள் சூழ்ந்த, பெருந்துறை மேய சேவகன் - பெருந்துறையிற்பொருந்திய வீரனும், நாயகன் - யாவர்க்கும் தலைவனும், மங்கைமார் கையில் வளையும் கொண்டு - பெண்களுடைய கையிலுள்ள வளையல்களையும் கவர்ந்துகொண்டு, எம் உயிரும் கொண்டு - எம்முடைய உயிரையும் கொள்ளை கொண்டு, எம் பணி கொள்வான் - எமது தொண்டினை ஏற்றுக்கொள்பவனும் ஆகிய இறைவனது, பொங்கும் - விளங்குகின்ற, மாமலர் - சிறந்த தாமரை மலரைப் போன்ற, சேவடிக்கண் - சிவந்த திருவடியின்கீழே, நம் சென்னி மன்னி - நம்முடைய தலை நிலைபெற்று நின்று, பொலியும் - விளங்கும்.

விளக்கம் : 'நம்பணி கொண்டவன்' என்றது, பொதுவாக உலகினரைக் குறித்தது. 'எம்பணி கொள்வான்' என்றது, சிறப்பாகத் தம்மையும் தம் போன்ற அடியாரையும் குறித்தது. மங்கைமார் கையில் வளையலைக் கொண்டது தாருகாவனத்தில், இவ்வளையலை இறைவன் மதுரையில் இட்டமை திருவிளையாடற் புராணத்துட் காண்க. 'மங்கைமார்' எனத் தன்மையிடம், படர்க்கையிடம் போலக் கூறப்பட்டது. இத்திருப்பாட்டு, இறைவனைக் காதலித்த மங்கையொருத்தியின் கூற்றாக அருளிச் செய்யப்பட்டது. 'உயிரும் கொண்டு' என்றது பசு போதத்தை அல்லாது ஆன்ம அறிவைக் கெடுத்துப் பதி அறிவு மிகச்செய்ததைக் குறித்தது. 'எம்பணி கொள்வான்' என்றது இறைபணி நிற்றலை.

இதனால், இறைவன் பசு போதத்தை நீக்கி அருளுவான் என்பது கூறப்பட்டது.

3

பத்தர் சூழப் பராபரன்
பாரில் வந்துபார்ப் பானெனச்
சித்தர் சூழச் சிவபிரான்
தில்லை மூதூர் நடஞ்செய்வான்