'யாவராயினும் அன்பரன்றி அறியொணா மலர்ச் சோதியான்' என்று இறைவனது எளிவந்த தன்மையைக் கூறினார். இறைவனது எளிவந்த தன்மையைக் கூறினார். இறைவனது திருவடியின்கீழ் அன்பரது சென்னி பொருத்தி விளங்குவதையே 'தூய மாமலர்ச் சேவடிக்கண் நம் சென்னி மன்னிச் சுடருமே' என்றார். ஏழனுருபு, 'கீழ்' என்னும் பொருளில் வந்தது. 'சேவடிக்கண்ணே' என்னும் பிரிநிலை ஏகாரம் விரிக்க. இதனால், இறைவன் அன்பரல்லாதார்க்கு அறிய முடியாதவன் என்பது கூறப்பட்டது. 1 அட்ட மூர்த்தி அழகன்இன்னமு தாய ஆனந்த வெள்ளத்தான் சிட்டன் மெய்ச்சிவ லோகநாயகன் தென்பெ ருந்துறைச் சேவகன் மட்டு வார்குழல் மங்கையாளையோர் பாகம் வைத்த அழகன்தன் வட்ட மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே. பதப்பொருள் : அட்டமூர்த்தி - அட்ட மூர்த்தங்களையுடையவனும், அழகன் - அழகையுடையவனும், இன் அமுது ஆய - இனிய அமுத மயமான, ஆனந்த வெள்ளத்தான் - பேரின்பக் கடலானவனும். சிட்டன் - மேலானவனும், மெய் - அழியாத, சிவலோக நாயகன் - சிவபுரத்துக்குத் தலைவனும், தென்பெருந்துறைச் சேவகன் - அழகிய திருப்பெருந்துறையில் எழுந்தருளிய வீரனும், மட்டுவார் - தேன் மணம் கமழும், குழல் - கூந்தலையுடைய, மங்கையாளை - உமையம்மையை, ஓர் பாகம் வைத்த அழகன் தன் - ஒரு பாகத்தே வைத்த அழகனும் ஆகிய இறைவனது, வட்ட மாமலர் - வட்ட வடிவமாகிய சிறந்த தாமரை மலர் போன்ற, சேவடிக்கண் - சிவந்த திருவடியின்கீழே, நம் சென்னி மன்னி - நமது தலை நிலைபெற்று நின்று, மலரும் - பொலிவு பெற்று விளங்கும். விளக்கம் : அட்டமூர்த்திமாவன, நிலம் நீர் தீ கால் விண் சூரியன் சந்திரன் ஆன்மா என்பன. இறைவன் எல்லாமாயிருக்கின்றான் என்பதாம். எனினும். அன்பர்களை ஆட்கொள்ளும்போது அருட்சத்தியோடு எழுந்தருளுகிறான் என்பார், 'மட்டு வார்குழல் மங்கையாளையோர் பாகம் வைத்த அழகன்' என்றார். 'வட்ட மாமலர்ச் சேவடி' என்றது, இறைவனது திருவடி குழைந்திருத்தலைக் குறித்தது. இதனால், இறைவன் அம்மையப்பனாய் எழுந்தருளி ஆட்கொள்வான் என்பது கூறப்பட்டது. 2
|