பக்கம் எண் :

திருவாசகம்
582


42. சென்னிப்பத்து
(திருப்பெருந்துறையில் அருளியது)

இறைவன் திருவடியின் கீழ்த் தமது தலை பொருந்தியிருப்பதாகக் கூறிய பதிகமாதலின், இது சென்னிப் பத்து' எனப்பட்டது.

சிவ விளைவு

சிவனது திருவடிப் பேற்றைச் சீவனுக்கு நிச்சயப்படுத்துதல். அஃதாவது, சிவன் தம் சென்னியில் திருவடி சூட்டிய இன்பத்தைப் பிறர்க்குக் கூறித் தெளிவுபடுத்தியதாம்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

தேவ தேவன்மெய்ச் சேவகன்
தென்பெ ருந்துறை நாயகன்
மூவ ராலும் அறியொ ணாமுத
லாய ஆனந்த மூர்த்தியான்
யாவ ராயினும் அன்ப ரன்றி
அறியொ ணாமலர்ச் சோதியான்
தூய மாமலர்ச் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னிச் சுடருமே.

பதப்பொருள் : தேவதேவன் - தேவர் பிரானும், மெய்ச்சேவகன் - உண்மையான வீரனும், தென்பெருந்துறை நாயகன் - அழகிய திருப்பெருந்துறைக்குத் தலைவனும், மூவராலும் அறியொணா - மும்மூர்த்திகளாலும் அறிய முடியாத, முதல் ஆய - முதல்வனாகிய, ஆனந்த மூர்த்தியான் - இன்ப வடிவினனும், அன்பர் அன்றி யாவராயினும் - அன்பரல்லாத பிறர் எவராயினும், அறியொணா - அவர்களால் அறியக்கூடாத, மலர்ச்சோதியான் - செந்தாமரை மலர் போன்ற ஒளியையுடையவனும் ஆகிய இறைவனது, தூய - தூய்மையான, மாமலர் - சிறந்த தாமரை மலர் போன்ற, சேவடிக்கண் - சிவந்த திருவடியின்கீழே, நம் சென்னி மன்னி - நமது தலை நிலை பெற்று நின்று, சுடரும் - விளங்கும்.

விளக்கம் : 'மூவராலும் அறியொணாத முதல்' என்றதால், பிரமன் திருமால் உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளாலும் அறிய முடியாதவன் என்பதாம். 'மாவேறு சோதியும் தாமறியா' என்று உருத்திரனும் இறைவனை அறியமாட்டாமை முன்னர்த் திருக்கோத்தும்பியில் குறிப்பிட்டமை காண்க. எனினும், அன்பராயின் சோதியாய் வெளிப்பட்டுத் தோன்றுவான் என்பார்,