பக்கம் எண் :

திருவாசகம்
589


தவறாது கிட்டும்' என்பார், 'தொண்டர்க்கு வழுவிலா மலர்ச்சேவடி' என்றார். அடிகளை நினைந்திட்டு - அழுமலர்க் கண்ணிணையடியவர்க் கல்லால் - அரிவரி தவன் திருவடியிணை யிரண்டும் என்ற சுந்தரர் வாக்கு இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.

இதனால், இறைவன் தன் அடியார்களுக்கு நிலையாமையை நீக்கியருளுவான் என்பது கூறப்பட்டது.

8

வம்ப னாய்த்திரி வேனைவாஎன்று
வல்வி னைப்பகை மாய்த்திடும்
உம்ப ரான்உல கூடறுத்தப்
புறத்த னாய்நின்ற எம்பிரான்
அன்ப ரானவர்க் கருளிமெய்யடி
யார்கட் கின்பம் தழைத்திடும்
செம்பொன் மாமலர்ச் சேவடிக்கண்நம்
சென்னி மன்னித் திகழுமே.

பதப்பொருள் : வம்பனாய்த் திரிவேனை - வீணனாய்த் திரிகின்ற என்னை, வா என்று - வா என்று அழைத்து, வல்வினைப் பகை - வலிமையான வினையாகிய பகையினை, மாய்த்திடும் - அழிக்கின்ற, உம்பரான் - மேலிடத்தில் உள்ளவனும், உலகு - உலகங்களையெல்லாம், ஊடு அறுத்து - ஊடுருவிச் சென்று, அப்புறத்தனாய் நின்ற - அப்பாற்பட்டவனாய் நின்ற, எம்பிரான் - எமது தலைவனும், அன்பர் ஆனவர்க்கு அருளி - அன்பர்களுக்கு இரங்கி அருள் செய்பவனுமாகிய இறைவனது, மெய்யடியார்கட்கு - உண்மையான அடியார்களுக்கு, இன்பம் தழைத்திடும் - இன்பம் பெருக நிற்கின்ற, செம்பொன் - செவ்விய பொன் போன்ற, மாமலர் - சிறந்த தாமரை மலர் போன்ற, சேவடிக்கண் - சிவந்த திருவடியின்கீழே, நம் சென்னி மன்னி - நம்முடைய தலை நிலைபெற்று நின்று, திகழும் - விளங்கும்.

விளக்கம் : 'அருளி' என்பது பெயர். 'அன்பரானவர்க்கு இரங்கி அருளுபவன்' என்றதனால் உம்பரானாகச் சேய்மையில் நிற்பது அன்பரல்லாதவர்க்கு என்பது விளங்குகிறது. 'மெய்யடியார்' என்றதும் மேல் 'அன்பரானவர்' என்றவரையேயாம். அருளுதல் இறைவனது செயலாகவும், இன்பம் தழைத்தல் திருவடியின் செயலாகவும் கூறுதலால், 'மெய்யடியார்கட்கு என வேறு கூறினார்.

இதனால், இறைவன் தன் மெய்யடியார்க்கு இன்பப் பொருளாய் விளங்குவான் என்பது கூறப்பட்டது.

9