பக்கம் எண் :

திருவாசகம்
590


முத்தனை முதற்சோ தியைமுக்கண்
அப்ப னைமுதல் வித்தனைச்
சித்த னைச்சிவ லோகனைத்திரு
நாமம் பாடித் திரிதரும்
பத்தர் காள்இங்கே வம்மின்நீர்உங்கள்
பாசந் தீரப் பணிமினோ
சித்த மார்தரும் சேவடிக்கண்நம்
சென்னி மன்னித் திகழுமே

பதப்பொருள் : முத்தனை - இயல்பாகவே பாசங்களில் நீங்கியவனும், முதல் சோதியை - ஒளிப்பொருள்களுக்கெல்லாம் மூல ஒளியாய் உள்ளவனும், முக்கண் அப்பனை - மூன்று கண்களையுடைய தந்தையும், முதல் வித்தினை - காரணங்களுக்கெல்லாம் முன்னேயுள்ள காரணமானவனும், சித்தனை - ஞான மயமானவனும், சிவலோகனை - சிவபுரத்தவனும் ஆகிய இறைவனது, திரு நாமம் பாடி - திருநாமங்களைப் பரவி, திரிதரும் - திரிகின்ற, பத்தர்காள் - அன்பர்களே, நீர் இங்கே வம்மின்கள் - நீங்கள் இங்கு வாருங்கள்; அவனை, உங்கள் பாசம் தீர - உங்களது பந்தங்கள் நீங்கும்பொருட்டு, பணிமின் - வணங்குங்கள்; அங்ஙனம் வணங்கினால், சித்தம் ஆர்தரும் - உள்ளத்தில் நிறைந்த, சேவடிக்கண் - சிவந்த அவனது திருவடியின்கீழே, நம் சென்னி மன்னி - நமது தலை நிலைபெற்று நின்று, திகழுமே - விளங்குதல் திண்ணம்.

விளக்கம் : உலகப்பயன் வேண்டி வணங்குதலும், வீடுபேறு வேண்டி வணங்குதலும் என இறைவனை வணங்கும் முறை இரண்டு. அவற்றை உலகப்பயன் வேண்டி வணங்குதல் செய்பவரை விளித்து, 'நீங்கள் மீள மீளப் பந்தத்திற்படுத்தும் உலகப்பயன் வேண்டி வணங்குதலை விடுத்து, வீடுபேறு வேண்டி வணங்குங்கள்; அவன் திருவடி நிழலை அடைதல் உறுதி' என்று அருளிச்செய்தார் என்க. இனி, 'அவன் திருவடி வேறாகச் சேய்மையில் இல்லை; உங்கள் உள்ளத்திற்றானே உள்ளன' என்பார், 'சித்தமார்தரும் சேவடி' என்பார்.

இதனால், இறைவனை வீடுபேறு வேண்டி வணங்குதல் வேண்டும் என்பது கூறப்பட்டது.

10

திருச்சிற்றம்பலம்