43. திருவார்த்தை (திருப்பெருந்துறையில் அருளியது) இறைவனது அருட்செயலாகிய வரலாறுகளை இப்பாடல்களில் கூறுவதால், இப்பகுதிக்குத் 'திருவார்த்தை' என்ற பெயர் அமைந்தது. இதன்கண் இவ்வரலாறுகளால் இறைவனது எளிவருந்தன்மை சிறப்பித்துக் கூறப்படுதல் அறியத்தக்கது. அறிவித்து அன்புறுதல் அறிவித்து அன்புறுதல் என்ற பழைய குறிப்பும் இவ்வெளிமையை அறிவிக்கும் முகத்தால் அன்பு பெருகுதல் என்றே பொருள்படுதல் அறிக. அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் மாதிவர் பாகன் மறைபயின்ற வாசகன் மாமலர் மேயசோதி கோதில் பரங்கரு ணையடியார் குலாவுநீ திகுண மாகநல்கும் போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன் மண்ணிடை வந்திழிந் தாதிப் பிரமம் வெளிப்படுத்த அருளறி வாரெம்பி ரானாவாரே. பதப்பொருள் : மாது இவர் பாகன் - பெண் பொருந்திய பாகத்தனும், மறை பயின்ற வாசகன் - வேதம் சொன்ன மொழியையுடையவனும், மாமலர் மேய சோதி - உயர்ந்த இதயமலரில் வீற்றிருக்கும் ஒளிப்பிழம்பானவனும், கோது இல் பரம் கருணை - குற்றமற்ற மேலான கருணையாளனும், அடியார் குலாவு நீதி - அடியார்கள் கொண்டாடுகின்ற நீதியினையே, குணமாக நல்கும் - குணமாக அவர்களுக்கு அருள்புரியும், போது அலர் - அரும்புகள் மலர்கின்ற, சோலை - சோலை சூழ்ந்த, பெருந்துறை - திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும், எம் புண்ணியன் - எமது புண்ணியப்பொருளானவனும் ஆகிய இறைவன், மண்ணிடை வந்து இழிந்து - மணணுலகத்தில் வந்து இறங்கி, ஆதிப்பிரமம் வெளிப்படுத்த - எல்லாவற்றுக்கும் முதலாயுள்ள பெரும் பொருளாகிய தனது தன்மையை வெளிப்படுத்திய, அருள் அறிவார் - அருளின் அருமையை அறிய வல்லர்கள், எம்பிரான் ஆவார் - எம்பிரான் ஆவார்கள்.
|