விளக்கம் : இவர்தல் - ஏறுதல்; அது இங்கு, 'பொருந்துதல்' என்னும் பொருளில் நின்றது. மலர், அன்பரது உள்ளத் தாமரை. 'அடியார் குலாவு நீதி குணமாக நல்குதல்' என்பது 'அடியார் வேண்டுவனவற்றை அவ்வாறே அவர்கட்குக் கொடுத்தல்' என்பதாம். இறைவன் மண்ணிடை வந்து ஆதிப் பிரமம் வெளிப் படுத்தியது, முனிவர் நால்வர்க்கு ஆலின்கீழ் அமர்ந்து உண்மை ஞானத்தை அருளியது. இதனை, "நன்றாக நால்வர்க்கு நான் மறையின் உட்பொருளை அன்றாலின் கீழிருந்தங் கறம்உரைத்தான் காணேடி" என்று, அடிகள் திருச்சாழலில் குறித்திருத்தல் காண்க. 'ஆதிப் பிரமம்' என்றது இறைவனையே வேறு போலக் கூறியதாம், இம்பெருமையினை உணர்ந்த உயர்ந்தோரே எமக்குத் தலைவராவார் என்பார், 'அருளறி வாரெம்பி ரானாவாரே' என்றார். 'இறைவன் என்றடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே என்ற சுந்தரர் தேவாரத்தையும் ஒப்பிட்டுக்கொள்க. இதனால், இறைவன் தன்னுண்மையினை உணர்த்தியருளுதல் கூறப்பட்டது. 1 மாலயன் வானவர் கோனும்வந்து வணங்க அவர்க்கருள் செய்தஈசன் ஞால மதனிடை வந்திழிந்து நன்னெறி காட்டி நலந்திகழுங் கோல மணியணி மாடநீடு குலாவும் இடைவை மடநல்லாட்குச் சீல மிகக்கரு ணையளிக்குந் திறமறி வாரெம்பி ரானாவாரே. பதப்பொருள் : மால் - திருமாலும், அயன் - பிரமனும், வானவர் கோனும் - தேவர் பிரானாகிய இந்திரனும், வந்து வணங்க - வந்து வழிபட, அவர்க்கு அருள் செய்த - அவர்களுக்கு அருள் புரிந்த, ஈசன் - ஆண்டவன், ஞாலம் அதனிடை - உலகத்தின்கண்ணே வந்து இழிந்து - வந்து தோன்றி, நல் நெறி காட்டி - நல்ல வழியினைக் காட்டி, நலம் திகழும் - நன்மை விளங்குகின்ற, கோலம் - அழகிய, மணி அணி - மணிகளால் அலங்கரிக்கப்பட்ட, மாடம் - மாடங்கள், நீடு குலாவும் இடைவை - நெடிது விளங்குகின்ற திருவிடைமருதூரில், மட நல்லாட்கு - இளம்பெண் ஒருத்திக்கு, சீலம் மிக - ஒழுக்கம் விளங்கும்படி, கருணை அளிக்கும் - கருணை புரிந்த, திறம் அறிவார் - தன்மையினை அறிய வல்லவர்கள், எம் பிரானாவார் - எமக்குத் தலைவராவார்கள். விளக்கம் : தேவர் உலகில் வாழும் திருமால் முதலியோர்க்கு அருள் புரியும் பெருமையுடைய இறைவன் நிலவுகில் வந்து அருள்புரிகின்றான் என்று அவனது எளிவந்த கருணையைப்
|