போற்றுவார், 'ஞாலமதனிடை வந்திழிந்து நன்னெறி காட்டி' என்றார். எனவே, 'காட்டி' என்றது, 'காட்டுதலை மேற்கொண்டு' என்றவாறாயிற்று. அதற்கு எடுத்துக்காட்டாகவே இத்திருப்பதிகத்தில் பல வரலாறுகளைக் குறித்தருளுகின்றார் என்க. இடைவை மடநல்லாட்குக் கருணையளித்தது : திருவிடைமருதூரில் வரகுண பாண்டியன் தனக்கு மணஞ் செய்விக்கப்பெற்ற பெண்ணை அவளது அழகுநோக்கிப் பெருமானுக்கு அர்ப்பணித்தான். அவனது சிறந்த அன்பை வெளிப்படுத்த அப்பெண்ணினது கரத்தை விடுத்து ஏனைய உறுப்புகளைப் பெருமான் தன் இலிங்கத் திருமேனியில் மறைத்துக்கொண்டான். திருமணக் காலத்தில் அவளது கையைத் தீண்டினமையால் பெருமான் ஏற்றுக்கொள்ளவில்லை போலும் என மன்னன் வருந்தினான். இறைவன் அக்கையினையும் மறைத்துப் பாண்டியனது அன்பை வெளிப்படுத்தியதோடு, அவனது மனைவிக்கும் வீடு பேறு அளித்தான். இதனால், இறைவன் அடியார்க்கு எளிமையாக வந்து அருள் புரியும் இயல்பு கூறப்பட்டது. 2 அணிமடி ஆதி அமரர்கோமான் ஆனந்தக் கூத்தன் அறுசமயம் பணிவகை செய்து படவதேறிப் பாரொடு விண்ணும் பரவிஏத்தப் பிணிகெட நல்கும் பெருந்துறையெம் பேரரு ளாளன்பெண் பாலுகந்து மணிவலை கொண்டுவான் மீன்விசிறும் வகையறி வாரெம்பி ரானாவாரே. பதப்பொருள் : அணி முடி ஆதி - அழகிய சடை முடியையுடைய முதல்வனும், அமரர் கோமான் - தேவர்கட்குத் தலைவனும், ஆனந்தக் கூத்தன் - ஆனந்தக் கூத்துடையவனும், அறுசமயம் - ஆறு சமயங்களும், பணி வகை செய்து - தன்னை வணங்கும்படியாகச் செய்து, பாரொடு விண்ணும் - மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும், பரவி ஏத்த - வாழ்த்தி வணங்க, பிணிகெட - பிறவி நோய் நீங்கும்வண்ணம், நல்கும் - அவர்கட்கு அருள் செய்கின்ற, பெருந்துறை - திருப்பெருந்துறையிலுள்ள, எம் பேர் அருளாளன் - எமது பெருங்கருணையாளனுமாகிய இறைவன், பெண்பால் உகந்து - வலைப்பெண்ணாய் வந்த உமையம்மையை மணக்க விரும்பி, படவது ஏறி - தோணியில் ஏறி, மணி வலை கொண்டு - அழகிய வலையைக் கொண்டு, வான்மீன் விசிறும் - பெரிய கெளிற்று மீனைப் பிடித்த, வகை அறிவார் - திறத்தை அறிய வல்லவர்கள், எம்பிரான் ஆவார் - எமக்குத் தலைவர்கள் ஆவார்கள்.
|