விளக்கம் : சமயங்களெல்லாம் விரும்பி வழபடுகின்ற பெருமையுடைய பேரருளாளன், ஒரு வலை மாதை விரும்பி வலைஞானய் வருகின்றான் என்று அவனது அருள் இயல்பினைக் கூறுவார், 'பேரரு ளாளன் பெண்பா லுகந்து மணிவலை கொண்டு வான்மீன் விசிறும் வகை' என்று அலைகடல்வாய் வலை வீசிய வரலாற்றைக் குறிப்பிட்டார். இவ்வரலாற்றைக் திருவிளையாடற்புராணத்துட்காண்க. கீர்த்தித் திருவகவல் உரையில் இவ்வரலாற்றுச் சுருக்கம் கொடுக்கப் பட்டுள்ளது. அகச்சமயம், அகப்புறச் சமயம். புறச்சமயம், புறப் புறச்சமயம் என்னும் வகைகளில் ஒவ்வொன்றும் ஆறாதலின், 'அறு சமயம்' என்றார். 'அறுவகைச்சமயத்து அறுவகையோர்க்கும் வீடு பேறாய் நின்ற கிழவோன்' என்று முன்னர்க் கூறியுள்ளதையும் காண்க. இதனால், இறைவனது பேராற்றலின் சிறப்புக் கூறப்பட்டது. 3 வேடுரு வாகி மகேந்திரத்து மிகுகுறை வானவர் வந்துதன்னைத் தேட இருந்த சிவபெருமான் சிந்தனை செய்தடி யோங்களுய்ய ஆடல் அமர்ந்த பரிமாஏறி ஐயன் பெருந்துறை ஆதிஅந்நாள் ஏடர் களையெங்கும் ஆண்டுகொண்ட இயல்பறி வாரெம்பி ரானாவாரே. பதப்பொருள் : ஐயன் - யாவர்க்கும் தலைவனும், பெருந்துறை ஆதி - திருப்பெருந்துறையில் உள்ள முதல்வனும், வேடு உரு ஆகி - வேடுவனது உருவங்கொண்டு, மகேந்திரத்து - மகேந்திர மலையின்கண், மிகுகுறை வானவர் வந்து - மிக்க குறைகளையுடைய தேவர்கள் வந்து, தன்னைத் தேட இருந்த சிவபெருமான் - தன்னைத் தேடும்படியாய் மறைந்திருந்தவனுமாகிய சிவபெருமான், அடியோங்கள் உய்ய - அடியேங்கள் உய்யும்வண்ணம், சிந்தனை செய்து - திருவுளங்கொண்டு, அந்நாள் - அக்காலத்தில், ஆடல் அமர்ந்த - ஆடலை விரும்பிய, பரிமா ஏறி - குதிரைமேல் ஏறி வந்து, ஏடர்களை - தோழர்களை, எங்கும் ஆண்டுகொண்ட - எவ்விடத்தும் ஆட்கொண்டருளிய, இயல்பு அறிவார் - தன்மையை அறிய வல்லவர்கள், எம்பிரான் ஆவார் - எமக்குத் தலைவராவார்கள். விளக்கம் : வேட வடிவம் தாங்கித் தேவர்களும் தேடும்படியாக மகேந்திர மலையில் மறைந்திருந்த இறைவன், தானே நினைந்து, குதிரையின்மேல் எல்லோரும் காண மதுரையம்பதியிலே வந்து அன்பர்களையாட்கொண்ட இயல்பினை அறிய வேண்டும் என்றார். இயல்பாவது, அன்பில்லார்க்கு அருளாததும் அன்புடையார்க்கு அருளுதலும் ஆம். வானவரது மிகுகுறையாவது, போகத்தின்பால்
|