கொண்ட பல வகை விருப்பம் என்க. தேவர்களும் தேட மகேந்திர மலையில் இருந்தது, ஆகமங்களை அருளிய பொழுது என்க. இதனால், இறைவன் அன்பர்க்கு வெளிப்பட்டுத் தோன்றியருளும் இயல்பு கூறப்பட்டது. 4 வந்திமை யோர்கள் வணங்கியேத்த மாக்கரு ணைக்கட லாய்அடியார் பந்தனை விண்டற நல்கும் எங்கள் பரமன் பெருந்துறை ஆதிஅந்நாள் உந்து திரைக்கட லைக்கடந்தன் றோங்கு மதில்இலங் கையதனிற் பந்தணை மெல்விர லாட்கருளும் பரிசறி வாரெம்பி ரானாவாரே. பதப்பொருள் : இமையோர்கள் வந்து - தேவர்கள் வந்து, வணங்கி ஏத்த - வழிபட்டுத் துதிக்க, மாக்கருணைக் கடலாய் - அவர்களுக்குப் பேரருள் புரியும் கடலாய், அடியார் பந்தனை விண்டு அற - அடியவர்களது பாசக்கட்டு விட்டு நீங்கும்படி, நல்கும் - அருளுகின்ற, எங்கள் பரமன் - எங்கள் மேலோனாகிய, பெருந்துறை ஆதி - திருப்பெருந்துறை முதல்வன், அந்நாள் - அக்காலத்தில், உந்து திரைக்கடலை - மேன்மேல் பரவுகின்ற அலைகளையுடைய கடலை, கடந்து - தாண்டிச் சென்று, ஓங்கும் - உயர்ந்த, மதில் - மதிலையுடைய, இலங்கையதனில் - இலங்கையில், பந்து அணை - பந்து பொருந்துகின்ற, மெல்விரலாட்கு - மென்மையான விரல்களையுடைய வண்டோதரிக்கு, அன்று அருளும் பரிசு அறிவார் - அவர் நினைத்த அன்றே அருள் செய்த தன்மையை அறியக் கூடியவர்கள், எம்பிரான் ஆவார் - எமக்குத் தலைவராவார்கள். விளக்கம் : தேவர்களும் வணங்கும் பெருமையுடையவன் கடலைக் கடந்து சென்று வண்டோதரியாகிய அரக்கிக்கு அருளிய தன்மையை அறிய வேண்டும் என்றார். வண்டோதரி இறைவனை வழிபட்டாள். வழிபாடு, பயன் கருதிய வழிபாடு என்றும், பயன் கருதாத வழிபாடு என்றும் இரு வகைப்படும். பயன் கருதிய வழிபாடு, வேண்டுவார் வேண்டிய பயனைக் கொடுக்கும், பயன் கருதாத வழிபாடு வீடு பேற்றினையே கொடுக்கும்; வண்டோதரியின் வழிபாட்டிற்கு இறைவன் குழந்தையாய்த் தோன்றிப் பயன் கொடுத்தான். இவ்வரலாற்றைக் குயிற்பத்தில் காண்க. இதனால், இறைவன் வேண்டுவார்க்கு வேண்டியதை நல்கும் இயல்புடையவன் என்பது கூறப்பட்டது. 5
|