பக்கம் எண் :

திருவாசகம்
597


பதப்பொருள் : நாதம் உடையது - வண்டின் ரீங்கார ஒலியையுடையதாகிய, ஓர் நல்கமலப் போதினில் - ஒப்பற்ற தாமரை மலரில், நண்ணிய - பொருந்திய, நல் நுதலார் - கலைமகள் திருமகள் என்னும் மகளிர் இருவரும், ஓதிப்பணிந்து - வாழ்த்தி வணங்கி, அலர் தூவி ஏத்த -மலர் தூவி வழிபட, ஒளிவளர் சோதி - ஒளி மிகுகின்ற சோதி வடிவமான, எம் ஈசன் - எமது ஆண்டவனும், மன்னும் - நிலைபெற்ற, போது அலர் சோலை - மலர்கள் விரிகின்ற சோலை சூழ்ந்த, பெருந்துறை - திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும், எம் புண்ணியன் - எமது புண்ணிய மூர்த்தியுமாகிய இறைவன், மண்ணிடை வந்து தோன்றி - பூமியில் வந்து காட்சி கொடுத்து, பேதம் கெடுத்து - வேற்றுமைகளைக் களைந்து, அருள் செய் பெருமை - அருள் புரிகின்ற பெருமையினை, அறிய வல்லார் - அறிய வல்லவர்கள், எம்பிரான் ஆவார் - எமக்குத் தலைவர் ஆவார்கள்.

விளக்கம் : அறிவும் செல்வமும் வடிவமாயுள்ள பெருமையுடைய கலைமகளும் திருமகளும் வணங்கும் பெருமான் பூமியில் தானே வந்து அடியார்க்கு அறியாமையைப் போக்கித் திருவருட் செல்வத்தை நல்குகிறான் என்றார். பேதம் கெடுத்தலாவது, அறியாமையால் உண்டாகும் விருப்பு வெறுப்புகளைக் களைதல். பெருமையை அறிதலாவது, இறைவன் உண்மை ஞானத்தை அருளுபவன் என்று அறிதலாம்.

கலைமகளும் திருமகளும் வழிபட்டுத் தம் கணவருக்குச் சிரம் பெற்றமை முறையே திருக்கண்டீயூர்த் திருவாரூர்த் தல புராணங்களுட் காண்க.

இதனால், இறைவன் அறியாமையைப் போக்கியருளுவான் என்பது கூறப்பட்டது.

7

பூவலர் கொன்றையம் மாலைமார்பன்
போருகிர் வன்புலி கொன்றவீரன்
மாதுநல் லாளுமை மங்கைபங்கன்
வண்பொழில் சூழ்தென் பெருந்துறைக்கோன்
ஏதில் பெரும்புகழ் எங்கள்ஈசன்
இருங்கடல் வாணற்குத் தீயில்தோன்றும்
ஓவிய மங்கையர் தோள்புணரும்
உருவறி வாரெம்பி ரானாவாரே.

பதப்பொருள் : பூ அலர் - மலர்கள் விரிகின்ற, அம் - அழகிய, கொன்றை மாலை - கொன்றை மாலையையணிந்த, மார்பன் - மார்பையுடையவனும், போர் - போர்த்தொழிலுக்குரிய, உகிர் - நகங்களையுடைய, வல்புலி - வலிமை மிகுந்த புலியை, கொன்ற வீரன் - கொன்ற வீரனும், மாது நல்லாள் உமை மங்கை பங்கன் - மாதரிற் சிறந்தவளாகிய உமையம்மையின் பாகனும், வண்பொழில் சூழ் - வலிமையான சோலை சூழ்ந்த, தென்பெருந்துறைக்கோன் -