46. திருப்படையெழுச்சி (தில்லையில் அருளியது) தொண்டர்களாகிய படைகள் மாயையாகிய பகையை வெல்லுவதற்கு எழுந்து செல்லுதலைக் கூறும் பகுதியாதலின், இது, 'திருப்படையெழுச்சி' எனப்பட்டது. இது உலகியற்படை போன்ற படை அன்று என்பதற்குத் 'திருப்படை' என்றார். பிரபஞ்சப் போர் மாயையாவது உலகமேயாதலால், அதனை வெல்வதற்குச் செய்யும் செயல்கள் பிரபஞ்சப் போர் ஆயின என்க. கலி விருத்தம் திருச்சிற்றம்பலம் ஞானவாள் ஏந்தும்ஐயர் நாதப் பறையறைமின் மானமா ஏறும்ஐயர் மதிவெண் குடைகவிமின் ஆனநீற் றுக்கவசம் அடையப் புகுமின்கள் வானவூர் கொள்வோம்நாம் மாயப்படை வாராமே. பதப்பொருள் : (,அடியவர்களே!) ஞானவாள் ஏந்தும் - ஞானமாகிய வாளை ஏந்துகின்ற, ஐயர் - தலைவரது, நாதப்பறை அறைமின் - பிரணவ நாதமாகிய பறையைக் கொட்டுங்கள்; மானம் மா ஏறும் - பெருமை பொருந்திய குதிரைமேல் எழுந்தருளி வந்த, ஐயர் - தலைவரது, மதி வெண்குடை - அறிவாகிய வெள்ளிய குடையை, கவிமின் - கவித்துக்கொள்ளுங்கள், ஆனநீற்றுக் கவசம் - அவருக்கு உரியதான திருநீறாகிய கவசத்தினுள், அடையப் புகுமின்கள் - முழுவதும் புகுந்துகொள்ளுங்கள்; இங்ஙனம் செய்யின், மாயப்படை வாராமே - மாயா காரியமாகிய சேனை வந்து தாக்காமல், நாம் வானவூர் கொள்வோம் - நாம் சிவலோகமாகிய ஊரினைப் பிடித்துக்கொள்வோம். விளக்கம் : 'போருக்குச் செல்லும் வீரர் பறையை அடித்துக் கொண்டு, குடையைக் கவித்துக்கொண்டு, கவசம் பூண்டு சென்று பகைப்படையை அழித்து ஊரைக் காத்துக்கொள்வர். அதைப் போன்று நாமும் பிரணவ நாதமாகிய பறையை அடித்துக்கொண்டு. அறிவாகிய குடையைக் கவித்துக்கொண்டு, தூய்மையான திருநீறாகிய கவசத்தையணிந்துகொண்டு சென்று, மாயையாகிய படையை எதிர்த்து வென்று வானமாகிய ஊரைக் கைக்கொள்வோம்' என்று அழைத்தவாறாம்.
|